தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்….
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்க தென் பகுதி அரசியல் சக்திகள் நடவடிக்கைகளை எடுக்கும் என தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வார பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் சித்தார்த்தன் இதனை கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய பிரச்சினையை ஆயுதமாக பயன்படுத்தி, தென் பகுதி அரசியல்வாதிகள் அதிகார போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு என்ற வகையில் இலங்கை பின்நோக்கி செல்வதற்கு அடிப்படையான காரணம் தேசிய பிரச்சினையாகும்.தேசிய பிரச்சினையை தமது அரசியல் இலாங்களுக்காக பகடை காயாக வைத்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் செயற்படுவதன் காரணமாகவே புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் முயற்சியும் கைக்கூடாமல் போயுள்ளது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டுமாயின் கட்டாயம் மகிந்த ராஜபக்ச தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம்.தேசிய பிரச்சினை குறித்து ஜனாதிபதி, பிரதமருக்கு மேலதிகமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அனைத்து தரப்பினரும் இதனை ஏற்றுக்கொண்டாலும் அதிகார போட்டி இதற்கு பிரதான தடையாக இருந்து வருகிறது.
தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் ஐக்கியமான வழங்க எண்ணுகின்றனர். தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக தமிழ் மக்களின் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தெற்கில் உள்ள அனைத்து அரசியல் தரப்புகளுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, அந்த தரப்பினரின் உதவியுடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண பங்கை வகிக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்துள்ள நாட்டில், சகல இனங்களும் அமைதியாக சகவாழ்வுடன் வாழ வேண்டுமாயின் அரசியல் பேதங்களை மறந்து அனைத்து அரசியல் சக்திகளும், அரசியல் தலைவர்களும் இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும். அது அவர்களின் பொறுப்பு மாத்திரமல்ல கடமையுமாகும் என சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தெற்கில் உள்ள அனைத்து அரசியல் தரப்புகளுடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி, அந்த தரப்பினரின் உதவியுடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண பங்கை வகிக்க வேண்டும்.”
இது தொடர்பாக இன்று வரை தமிழ்த் தரப்பு பெரிய அளவில் செயற்படவில்லை. இனியாவது போதிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.