கணபதி சர்வானந்தா….
முன்னைய நாட்களில் எமது சமூகக் கொண்டாட்டங்களிலும், விழாக்களிலும் புற் பாய் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.. ஒரு குடும்பத்திற்குரிய சொத்துகளில் புற்பாய்கள் அதிகம் இருக்கும். புற் பாயில் புடுத்துறங்குவதென்பது ஒரு அலாதியான அனுபவம். இந்தப் புற் பாய்களுக்குப் பின்னால் ஒரு சமூக வரலாறும், அரசியலும், சமூகக் கதைகளும் அதிகம் இருக்கின்றன. அத்தகைய பெருமைமிக்க புற் பாய்கள் ஒரு இனத்தின வரலாற்றைப் பேசியதை கண்டோம். கடந்த மே 9ஆம் திகதி தொடக்கம் 18வரை யாழ்.பல்கலைக் கழகத்தில் ஒரு காண்பியல் கண்காட்சி நடைபெற்றது. மட்டக்களப்பு பன் பாய்களின் சமூக அழகியலைப் பேசுகின்ற கண்காட்சியாக இது அமைந்திருந்தது. பல் நெடுங்காலம் மட்டக்களப்பு மண்ணில் பன் பாய் இழைப்பதை தனது வாழ்வாதாரமாகக் கொண்ட சுலைமான் ஆச்சியின் முயற்சியைக் கொண்டாடுவதாக இக் கண்காட்சி அமைந்திருந்தது. “முதுசம்” என்ற இக் காண்பியல் கண்காட்சியினை யாழ். பல்கலைக் கழக நுண் கலைத்துறை “கலை வட்டம்” ஒழுங்கு செய்திருந்தது. கண்காட்சியின் இறுதி நாளன்று நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி சனாதனனிடம் இது பற்றிக் கேட்டோம்.
முதுசம் என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது?
போரினால் பாதிக்கப்பட்டுக் கிடந்த மண்ணில் எமது முதுசொத்தைத் தேடுவதாக அமைந்த இம் முயற்சியானது 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போதுதான் நான் யாழ்.பல்கலைக் கழகத்தில் புதியதாய் பணிக்குச் சேர்ந்திருந்தேன். அந்த யுத்த நெருக்கடியில் கலை முயற்சிகள் அற்றுப் போயிருந்த காலகட்டம். சாதாரண இசைக் கச்சேரிகள் கூட நடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. கலை பயிலல் என்ற விடயமும் காணாமற் போயிருந்த து. ஒரு கலைஞன் என்ற வகையில் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டேன். மறைந்து போயிருக்கின்ற கலைப் பொக்கிஷத்தைத் தேடுவதென்று முடிவு எடுத்ததன் விளைவுதான் “முதுசம்” ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம் எனலாம். முன்னோரினால் எமக்குக் கையளிக்கப்பட்ட அல்லது அவர்களால் விட்டுச் சென்ற பொருட்களைப் பாதுகாக்க வேண்டும் , அத்துடன் அது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்த வேண்டும் என்ற தேவை இருப்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். பாதுகாத்தல், பயிலல், பரவலாக்கல் என்ற மூன்று “ப” க்களை முன்னிறுத்தி எமது பணியைத் தொடர்ந்தோம். என்கிறார் நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி சனாதனன்.
“முதுசம்” ஆரம்பம் எப்படி அமைந்திருந்தது.? எதற்காக இதை ஆரம்பித்தீர்கள்? என்று அவரிடம் கேட்டோம்.
ஆரம்பத்தில் மரபு சார்ந்த இசைக் கச்சேரியோடுதான் எமது முயற்சி ஆரம்பிக்கப் பட்டது. ஏனெனில், ஒரு கச்சேரியைக் கூட நடத்துவதற்கு வாய்ப்பாக அப்போதைய சூழ்நிலை அமைந்திருக்கவில்லை. யுத்தகால ஊரடங்குச் சட்டம் மக்கள் இயல்பை வெகுவாகப் பாதித்திருந்தது. அச் சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக் கழகம் மிகவும் பாதுகாப்பான தாகக் காணப்பட்டது. எனவேதான் எமது “முதுசம்” இசைக் கச்சேரியோடு யோடு ஆரம்பிக்கப்பட்டது. கச்சேரிகள், இசை நாடகங்கள் என தொடர்ந்த முயற்சிகளில் காண்பியல் கண்காட்சியையும் செய்ய ஆரம்பித்தோம். வீடுகளில் காணப்பட்ட அருகிவரும் கலைத்துவமான பாவனைப்பொருட்களைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கட்டிடக் கலை பற்றிய ஒரு மாநாடும் அதைத்தொடர்ந்து ஒரு நிழற்படக் கண்காட்சியும் நடைபெற்றது. கொட்டில் தொட்டுக் கோயில்கள் வரை காணப்பட்ட கட்டடக்கலைகளில் நாம் அவதானித்த கலைசார் பண்பினை ஆவணப்படுத்துவதாகத் தொடங்கிய முயற்சி, பின்னர் இந்தக் கண்காட்சியாக மாறி இருக்கிறது.
எத்தகைய கால இடைவெளியில் “முதுசம்” கொண்டாடப்படுகிறது. எந்த வகையில் அதனை அமைத்துக் கொள்ளுகிறீர்கள்? தற்பொழுது நடைபெறும் இக் கண்காட்சியை பாய் கண்காட்சியாக நடத்த வேண்டும் என்று எண்ணியதேன்?
ஆரம்பத்தில் ஒரு நடவடிக்கைகளும் இல்லாத சமயத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு விடயத்தை எடுத்து முதுசம் கண்காட்சி நடத்தப்பட்டது. பின்னர் தொடர்ச்சி விடுபட்டு இப்போது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முயற்சி நடைபெறுவதாக இருக்கிறது. இற்றைவரை 16 கண்காட்சிகளை நடத்தி இருக்கிறோம். இதற்கிடையே சமகாலத்துக் கலை முயற்சிகளையும் கண்காட்சிப் படுத்தியிருக்கிறோம். அவைகள் “முதுசம்” என்ற வரையறைக்குள் வராவிட்டாலும் ஒரு கலை முயற்சியை முன்னிறுத்துகின்ற முயற்சியாக அதனைப் பார்க்கலாம்.
ஆவணப்படுத்தலும், பழையவற்றைப் பரவலாக்கலும் என்றவகையில்தான் இந்தப் பாய் கண்காட்சி முதுசம் என்ற வரையறைக்குள் வருகிறது. முதன் முதலாக யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்து வருகிற ஒரு முதுசமாக இதைக் கருதுகிறோம். முன்னர் யாழ்ப்பாணப்படைப்புகளை மட்டும் முன்னிறுத்திச் இத்தகைய கண்காட்சியை செய்துவந்திருக்கிறோம். கலை சமூக பண்பாட்டுத் தளங்களில் தற்போது எமது சமூகம் பல சவால்களை எதிர்கொள்வது யாவரும் அறிந்த விடயம். எனவேதான் அதனை முன்னிறுத்தி இப் பாய் கண்காட்சியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். அத்துடன் இந்தகைய பாய்களின் பின்னணியில் இருக்கின்ற சமூக முக்கியத்துவத்தினூடாக எமது வரலாற்றைச் சொல்லலாம் என்றும் எண்ணினோம்.வெறுமனே தொல்பொருள் அகழ்வினாலும், ஆராய்ச்சிகளினாலும் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் எழுதிய வரலாற்றை எமக்குரிய ஒரு முழுமையான வரலாறாக க் கொள்ள துமுடியுமா? என்றது கேள்விக்குரிய விடயம். விரும்பியோ விரும்பாமலோ இனத்துக்குரிய வரலாறு முக்கியமானது. ஏனெனில் வரலாற்றை வைத்தேதான் உரிமை எத்தகையது என்று கணக்கிடப்படுகிறது. நாட்டில் எமக்கிருக்கும் உரிமையைக் கொண்டாடுவதற்கு வரலாறு தேவைப்படுகிறது. எனவே வழமையாக வரலாறை எழுதப் பயன்படும் பொருட்களை விட்டு இது போன்ற சமகாலங்களில் காணப்பட்ட கைவினைப் பொருட்களை வைத்து எழுதப்படுகின்ற வரலாறில் விடுபட்ட பல புதிய விடயங்களைக் கொண்டுவரலாம். கடந்த காலத்தே காணப்பட்ட சமூக உறவுகள் என்ற விடயத்தைக் கூட இதனூடாகக் காணலாம் என்பது எனது கருத்து.
நான் அறிய இந்த முயற்சியானது பல காலத்திற்கு முன்னர் தொடங்கப்பட்டதொன்று. இவ்வளவு காலம் பின் தள்ளி நடைபெறுகிறதே, அதற்கு என்ன காரணம் என்கிறீர்கள்?
உண்மையிலேயே இந்தக் கண்காட்சியானது இரண்டு வருடங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதொன்று. எனது பணத்தை முதலிட்டு இந்தப் பாய்களைத் தயாரித்திருந்தேன்.அது தவிர்க்க முடியாத காரணங்களினால் பின் தள்ளப்பட்டு இப்போது நடைபெறுகிறது. கண்காட்சிக்கு முன்னதாக அவற்றைப் பற்றிய சில விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தப் பாய் இழைப்பதில் பன்னெடுங்காலம் ஈடுபட்டிருந்தவரும், இந்தப் பாய்களை எனக்கு இழைத்துத் தந்தவருமான சுலைமான் ஆச்சியைச் சந்திக்கப்போனபோது எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. சுலைமான் ஆச்சி நினைவற்றிருந்தார்.அவர் பாய் இழைப்பதைவிட்டுப் பல காலமாயிற்று என்று அவரது உறவினர்கள் சொன்னார்கள். இனி அவரால் இப்படிப்பட்ட பாயை இழைக்க முடியாது என்று தெரிந்தது. முதலில் இந்தப் பாய்களை விற்றே கண்காட்சிச் செலவுகளைச் செய்யலாம் என்று எண்ணி இருந்தோம். ஆனால் தற்போது மனதை மாற்றிக் கொண்டோம். அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறோம். அத்துடன் இந்த விடயம் தற்போது பள்ளிக் கூடச் சித்திரப் பாடத்திட்டத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாட்டில் இதற்கான தரவு மிகவும் குறைவாகவே கிடைக்கப்பெறுகிறது. எனவே நாங்கள் இதை ஒரு முறை சார்ந்த ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு இளைஞன் ஒருவரால் ஆய்வு செய்யப்பட்டு அந்தக் கட்டுரையைத்தான் பிரசுரித்திருக்கிறோம். நான் நினைக்கிறேன் தற்போதுதான் பாய் பற்றிய விடயங்கள் ஒரு எழுத்துருவை எட்டி இருக்கிறது. எனவே இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறும்பட்சத்தில் அதனையும் சேர்த்து பாய் பற்றிய வரலாறை ஒரு முழு நிலைக்குக் கொண்டு சென்று சேர்க்கலாம் என்று நம்புகிறேன்.
இந்தவிதமான கண்காட்சிகளின் நோக்கம் அதனூடாக ஒரு வரலாற்றைப் பதிவு செய்வதாகத்தானிருக்கும். பொது மக்களின் நாளாந்த விடயங்களிலே காணப்படுகின்ற கலையம்சங்கள், அரசியல் பண்பாட்டு சமூக விடயங்களைப் பதிவு செய்வதன் தொடக்கப் புள்ளியாக இதைப் பார்க்கிறோம் என்கிறார் யாழ். பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி தா. சனாதனன் அவர்கள்.