குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், கோட்டைக்கேணிக்கு அப்பால் தமிழர்களின் பூர்வீக பகுதியான சிவந்தா முறிப்புக்குளம் மற்றும் அதனோடிணைந்த வயல் நிலங்களை அபகரிக்கும் முயற்சி நேற்று ( 2018.07.30 ) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது
சிவந்தா முறிப்புக் குளம் மற்றும் அதனோடு இணைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்களை சிங்கள மக்கள் சிலர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதனை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் தினைக்களத்தினருக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த இடத்திற்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் கிருசுணன் , ஜெகன்நாத் மற்றும் திணைக்கள பணியாளர்களும் உடனடியாக விரைந்து குறித்த கையகப்படுத்தும் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலருக்கும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளருக்கும் ரவிகரன் இது தொடர்பில் தொலைபேசியில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் இ.பிரதாபன், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய திட்ட முகாமையாளர் வி.கே.பி.ஜெயநாத ஆகியோரும் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.