குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.மாநகர சபை மக்களுக்கு சேவையை நிறைவேற்றுவதற்கு உரிய முறையில் திறம்பட செய்ய விடாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தடுக்கின்றார் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும், மாநகர சபை உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாகவே அவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுகின்றார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு இன்று செவ்வாய் கிழமை காலை நடைபெற்று. அதன் போது கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாநகர சபையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு நடக்கின்றது. குறிப்பாக அவ்வமைச்சு அனுப்பும் சுற்று நிருபங்கள் ஊடாக இக் கட்டுப்படு விதிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர சபையை எடுத்து பார்தால் அவர்கள் மக்கள் சேவையை திறம்பட செய்வதற்க்காக பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.
குறிப்பாக உறுப்பினர்களுக்கான போக்குவரத்து, தொலைபேசி, உபகரண செலவு என்பவை உட்பட பல மேலதிக செலவுகள் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ்.மாநகரத்திற்க்கு சேவை செய்யும் உறுப்பினர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தியுள்ளது.
வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் இந்த நடவடிக்கையை ஏற்க்க முடியாது. இது போன்று பல விடயம் நடக்கின்றது. எல்லாவற்றையும் சபையில் சொல்ல முடியாது.
உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் வேலை செய்யாமல் தடுக்கவே இவ்வாறான சுற்று நிருபம் அனுப்பப்படுகின்றது. 30 வருடமாக பின்னோக்கி நலிந்து போயிருக்கும் எங்களை கௌரவ குறைவா நடத்த அனுமதிக்க முடியாது என்றார்.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், அரச அதிகாரிகள் சுற்று நிருபத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றவர்கள். சுற்று நிருபத்தை மீறி செயற்பட முடியாது.
எனவே சுற்று நிருபத்தில் மாற்றம் தேவை. அதற்கான நடவடிக்கையினை சபை எடுக்க வேண்டும். ஆனால் சபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டு நடப்பார்கள் என முதல்வர் தெரிவித்தார்.
இதன் போது கருத்து வெளியிட்ட உறுப்பினர் மு.ரெமிடியஸ், வடமாகாண முதலமைச்சர் யாழ்.மாநகர சபையில் உள்ள ஒரு சிலருடைய தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவே இவ்வாறான செயற்பாடுகளில் தேவையற்ற விதத்தில் ஈடுபடுகின்றார் என்று குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.