குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மூன்று மாடி சந்தைக் கட்டடத் தொகுதி தேவையில்லை என்றும் மாறாக வர்த்தகர்களுக்கு ஏற்ற வகையில் கனகபுரம் மற்றும் ஏ9 பிரதான வீதியை நோக்கியபடி புதிய கட்டடத்தை அமைத்து தருமாறும் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று (01-08-2018 ) கிளிநொச்சி பொதுச் சந்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் பல இடங்களில் மாடி சந்தைக் கட்டடத் தொகுதிகள் வெற்றியளிக்கவில்லை. முக்கியமாக சனத் தொகை அதிகளவு கொண்ட யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் தென்னிலங்கையில் பல மாவட்டங்களில் மாடி சந்தைக் கட்டடங்கள் வெற்றியளிக்காத நிலையில் குறைந்தளவு சனத்தொகையை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தைக் கட்டடத்தை மூன்று மாடியில் அமைப்பது வர்த்தகர்களாகிய எங்களை அழிவுக்கு கொண்டு செல்லும் ஒரு திட்டமே.
எனவே எமது விருப்பத்திற்கு மாறாக எமக்கான கட்டடத்தை அமைக்க வேண்டாம் என அரசியல் தரப்பினர்கள்,அரச அதிகாரிகள், கரைச்சி பிரதேச சபையினர் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம். என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் எங்களது சந்தையின் தற்காலி கட்டம் தீயினால் அழிந்த போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் மத்திய அரசின் அமைச்சர்களுடன் பேசியதற்கு அமைவாக எமக்கு நட்டஈடும் புதிய கட்டடம் அமைப்பதற்கு 150 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 80 மில்லியன் கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது அதனை மாவட்டச் செயலகம் வீட்டுத்திட்டத்திற்கு பயன்படுத்திவிட்டனர் எனவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது தங்களின் விருப்பத்திற்கு மாறாக மாவட்டத்தில் உள்ள அரசியல் தரப்புக்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களின் விருப்பத்தை எங்கள் வாழ்வாதாரத்தின் மீது திணிக்கின்றனர் ஆகவே நாம் இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வர்த்தக சங்கத் தலைவரும், உப தலைவரும் வருகை தந்தநிலையில் வர்த்தகர்களுக்கும் அவர்களுக்கும் இடைய முறுகல் நிலை ஏற்பட்டது. வர்த்தக சங்கத் தலைவர் அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டவர் என்றும் அக் கட்சியினர் சந்தையில் புதிய மாடிக் கட்டத்தை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றனர் என்றும் அதனை சந்தை வர்த்தக சங்கத் தலைவரும் முன்னெடுத்து செல்கின்றார் என்பதோடு, அவர் எங்களது விருப்பத்திற்கு செயற்படுகின்றார் என்றும் வர்த்தகர்கள் தெரிவித்து கருத்து முரண்பாட்டில் ஈடுப்பட்டனர்.