மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றில் தாக்கல் செய்திருந்த பொதுநலமனுவில் இந்தியா முழுவதிலும் உள்ள 12 லட்சத்துக்கு மேற்பட்ட அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளில் வழங்கப்படும் மதிய உணவுத்திட்டத்தில் முறையான கண்காணிப்பு இல்லாததால், உணவு, நச்சுத்தன்மையாக மாறுவதுடன் பல்வேறு உடல்நல பாதிப்புகளும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மதிய உணவு திட்டத்தால் பலன் அடையும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் தங்களது இணையதளத்தில் 3 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கடந்த வருடம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று குறித்த மனு, விசாரணைக்கு வந்த போது தங்கள் உத்தரவுப்படி மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா 50 ஆயிரம் மூபா அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் உச்சநீதிமன்ற சட்ட பணிகள் ஆணையகத்திடம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.