வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை காவற்துறையினருக்கு காலவறையறையற்ற வகையில் விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் காவற்துறை மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் காவற்துறை நிலையங்களில் கடமை புரியும் காவற்துறை உத்தியோகத்தர்களுக்கான விடுமுறையே இவ்வாறு காலவறையற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஆவா குழு மற்றும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
காரணமின்றி பல வீடுகள், வன்முறையாளர்களினால் தாக்கப்பட்டதுடன், கிராம அலுவலகருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு கிராம அலுவலரின் அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடும் ஆவா குழு மற்றும் ஏனைய குழுவினர் உட்பட வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்வதற்கான காவற்துறை குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசேட காவற்துறை ரோந்து நடவடிக்கைகள், மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துகள் என்பன காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் அறிவிப்பினை சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் விடுத்துள்ளார்.