Home இந்தியா கல்விக்காக மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை கேரளத்தின் மகள் எனப் பாராட்டிய கேரள முதல்வர்

கல்விக்காக மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை கேரளத்தின் மகள் எனப் பாராட்டிய கேரள முதல்வர்

by admin


கல்விக்காக மீன் விற்று பிரபலமான கல்லூரி மாணவியை நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் பினராயி விஜயன் அவரை கேரளத்தின் மகள் என்று சிறப்பித்துள்ளார்.  ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஹனன் குடும்பச் செலவுக்கும், கல்வி கட்டணம் செலுத்தவும் திருச்சூரில் உள்ள தெருக்களில் மீன் விற்பனை செய்தமை  சமூக ஊடகங்களில் வெளியானது.

இதற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர். மாணவியின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டனர். அதே நேரம் இன்னொரு தரப்பினர் ஹனனை விமர்சித்தனர்.கல்லூரி மாணவி ஹனன் தொடர்பான செய்திகள் கேரளாவில்கவனத்தை ஏற்படுத்தியது. சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், ஹனன் படித்து வந்த கல்லூரி ஆசிரியர்கள் ஹனனுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட, இன்னொரு தரப்பு கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது.

இதனால் வேதனை அடைந்த ஹனன்  தன்னை விமர்சிக்க வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார். இதையடுத்து அவரை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் கட்டளை பிறப்பித்தது. மாநில காவல்துறைக்கும் முறைப்பாடு அனுப்பப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.

ஹனனை பாராட்டி பேசிய பினராயி விஜயன், ஹனனை தவறாக விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய 2 இளைஞர்கள் உட்பட இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று மாணவி ஹனனை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து நேரில் பாராட்டியுள்ளார்.  அப்போது ஹனனை கேரளாவின் மகள் என்றும், அவருக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதி அளித்தார்.

இதுதொடர்பில் முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ள கேரள முதல்வர் மாணவி ஹனனை அலுவலகத்தில் சந்தித்தேன். அவரது கள்ளம்கபடமற்ற சிரிப்பை கண்டதும் மனம் நெகிழ்ந்தது. அந்த சிறுமிக்கு கேரளா துணை நிற்கும். அவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும், சிறுமியை விமர்சித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை கேரள முதல்வரை சந்தித்த பின்பு ஹனன் கேரளா காதி வாரியம் நடத்திய புடவைகள் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது நடந்த ஆடை அணிவகுப்பிலும் பங்கேற்றார். கேரளாவில் இளம்பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பெண்ணாக ஹனன் காணப்படுகிறார். எனவே அவரை காதி வாரிய சேலை அறிமுக விழாவில் பங்கேற்க அழைத்தோம். அவர் பங்கேற்றதின் மூலம் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கை வளருமென்று நம்புகிறோம் என்று  இதுபற்றி கேரள காதி வாரிய துணைத்தலைவர் ஷோபனா ஜார்ஜ் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More