குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையின் வடக்கில் சீனாவில் தலையீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் விசேட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு பயணம் செய்து, இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையின் வடபகுதிக்குள் சீனா பிரவேசிப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய சவாலாக அமையும் என இந்திய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.தெற்கில் அபிவிருத்திகளில் சீனாவை சம்பந்தப்படுத்திக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் சீனாவை வடக்கு பக்கம் நோக்கி திருப்பி விடுவது இந்தியாவுக்கு பிரச்சினையாக அமைந்து விடும் என இந்திய பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் சீனாவின் அனுசரணையில் மேற்கொள்ள உத்தேசியக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு திட்டம், விமான நிலைய திட்டம் போன்றவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பாரதூரமான பிரச்சினையாக அமையும் என்றும் இந்திய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.இதற்கு அமைய வடக்கு பகுதிக்கான அபிவிருத்தித் திட்டங்களை சீனாவிற்கு வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சராக டி.எம்.சுவாமிநாதன் இருந்து வருகிறார். வடக்கில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் அவரது பொறுப்பின் கீழ் வருகிறது. இந்த திட்டத்திற்கான விலை மனு கோரப்பட்டிருந்தது. எனினும் இறுதி விலை மனு கோரலை புறம் ஒதுக்கி விட்டு, அந்த திட்டம் சீனாவின் சைனா ரயில்வே நிறுவனத்திற்கு வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
சீனா ரயில்வே விலை மனுக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.இவ்வாறான நிலையில் எப்படி அந்த திட்டம் சைனா ரயில்வே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என விலை மனுகோரலை முன்வைத்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இது சம்பந்தமாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் சீனா மற்றும் இந்தியாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டின் இறையாண்மை என்பது தொடர்ந்தும் பேசப்பட கூடிய விடயம் அல்ல தெளிவாகியுள்ளது. தெற்கு சீனாவுக்கும் வடக்கு இந்தியாவுக்கும் உரித்தான பின்னர் நடக்க போவதை மக்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.எவ்வாறாயினும் சீனா ஏற்கனவே இலங்கைக்குள் புகுந்து விட்டது. சீனாவை நாட்டுக்குள் விட்டவர்கள் வேறு யாருமல்ல. தற்போது விகாரை விகாரையாக சென்று நாட்டின் இறையாண்மை பற்றி அழுது புலம்பும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே, சீனா, இலங்கைக்குள் கால் பதிக்க காரணமாக இருந்தார். இந்த பாவத்தை தற்போது நாட்டு மக்கள் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.