உத்தரப்பிரதேசத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகயிருந்த தலித் பெண் அதிகாரிக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க மறுத்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் சமூகத்தை சேர்ந்த கால்நடைத்துறை துணை தலைமை அதிகாரியான டாக்டர் சீமா என்பவா மேலிட உத்தரவின் பேரில் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பவா பூராக் என்ற கிராமத்துக்கு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.
அங்கு கிராமத்தலைவர்கள் உட்பட்டோருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த வேளை தாகம் ஏற்பட்டதனால் அங்கிருந்தவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட போதும் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தண்ணீர் வழங்க மறுத்துவிட்டனர்.
2½ மணி நேரமாக தண்ணீர் குடிக்காமலேயே இருந்தமையால் நீரிழிவு நோயாளியான அவருக்கு உடலில் நடுக்கம் ஏற்பட்டதனால் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்துக்கு சென்று தண்ணீர் குடித்தார்.இது சம்பந்தமாக டாக்டர் சீமா, மாவட்ட கலெக்டரை சந்தித்து முறைப்பாடு வழங்கியதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளினையடுத்து உள்ளூர் பஞ்சாயத்து பெண் தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலித் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது