குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீமூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அராலிப் பிரதேசங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும், அவர்கள் இரவு வேளைகளில் வீடுகளுக்குக் கற்களால் எறிவதாகவும் வீட்டு யன்னல்கள் மற்றும் கதவுகளைத் தட்டுவதாகவும் அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் தீ மூட்டப்பட்டுள்ளதுடன், அயலிலுள்ள அவரது தம்பியின் வீட்டு யன்னல்களைத் தட்டியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தைக் கலக்கமடையச் செய்துவரும் குள்ள மனிதர்களின் அட்டகாசம்தான் இது என்று அயலவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முன்னர் ஒரு போது கிறிஸ் பூதம், பின்னர் ஆவாக்கள், வாள்வீச்சு நாயகர்கள், போதையூட்டும் விற்பனையாளர்கள், திருடர்கள், சண்டியர்கள், என புலிகளின் பின்னான காலத்தை அச்சத்தில் வைத்திருக்க முனையும் நிகழ்ச்சி நிரலில் இப்போ குள்ளர்கள் இணைந்துள்ளனர்… இதன் தொடர்ச்சியாக யாழில் அமைதியின்மை, சமூக விரோத செயல்கள் கட்டுக்கு அடங்காமை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்ற காரணங்களை முன்வைத்து குடா நாடு தொடர்ந்தும் இராணுவ இடுக்குப் பிடிக்குள் வைத்திருப்பதே இவற்றை இயக்குபவர்களின் இலக்கு என குடா நாட்டின் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.