இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பற்ரீசியா ஸ்கொட்லண்ட்( Patricia Scotland) எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பாராளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஆயுத போராட்டம் முடிவுற்றிருந்தாலும் மக்கிடையே அமைதியும் சமாதானமும் இல்லை என்பதனை எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்கள் காணப்பட்ட அதேவேளை அரசாங்கம் சர்வதேசத்துக்கும் மக்களிற்கும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
புதிய அரசியல் யாப்பு, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகள், படையினர் கைவசமுள்ள மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, போன்றவற்றில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேவேளை இலங்கையில் ஜனநாயக மேம்பாடு, சட்ட ஒழுங்கு, நல்லாட்சி மற்றும் சூழல் மாசடைதலை தவிர்த்தல் உள்ளடங்கலான பல விடயங்களில் பொதுநலவாய செயலகத்தின் பங்களிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு தெளிவுபடுத்திய செயலாளர் நாயகம், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு தமது பணியகம் தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.