நிமலேந்திரா….
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மார்கழி மாதம் 20, 21 ஆம் திகதிகளில் திறந்த இருதய சத்திரசிகிச்சையானது முதற்றடவையாக இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினாரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது யாழ் போதனா வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஏற்பட்ட ஓரு முக்கிய மைல் கல்லாகும் (Milestone). இதனால் இலங்கையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை நடைபெறும் 4 அரச மருத்துவமனைகளில் ஒன்றாக யாழ் போதனா வைத்தியசாலையும் தரம் உயர்ந்தது. இதுவரைகாலமும் இலங்கையில் திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளிலேயே நடைபெற்றன. இவ்வைத்தியசாலைகள் குழாத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்தது தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவை ஆரம்பிக்க உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
கடந்த 2017 மார்கழியில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சையை ஆரம்பிக்கும் போது இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களுக்கான சத்திர சிகிச்சை(Coronary Artery Bypass Graft Surgery (CABG)), இதய வால்வு மாற்று சத்திர சிகிச்சை(Valve Replacement Surgery), பிறப்பிலிருந்து இதயத்தில் ஏற்படுகின்ற அமைப்பு ரீதியான அசாதாரண மாற்றங்களுக்கான சீரமைப்பு சத்திர சிகிச்சை (Corrective Surgery for Congenital Cardiac Defect) முதலான சேவைகள் விரிவாக்கப்பட்டு சில ஆண்டுகளில் மிகச் சிறப்பான இருதய சத்திரசிகிச்சைகளை யாழ் போதனா வைத்தியசாலையால் வழங்க முடியுமென எதிர்பார்க்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஒரு மருத்துவ சாதனை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்று மருத்துவராகி, மருத்துவத்தில் உயர் பட்டப்படிப்பினை நியூசிலாந்தில் பயின்ற இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் (MBBS (Jaffna), MD – Surgery (Colombo), MRCS (England), MRCSEd Consultant & Specialist in Cardiothoracic Surgery) இருதய வால்வில் கிருமித்தொற்று ஏற்பட்டதானால் தீவிரசிகிச்சைப் பிரிவில் 14 நாள்கள் செயற்கை சுவாசம் மூலம் உயிரூட்டப்பட்டுக் கொண்டிருந்த 41 வயதுடைய முருகையா தயானந்தன் என்பவருக்கு ஆபத்துநிறைந்த இருதய வால்வு மாற்று சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு மறுவாழ்வு தந்துள்ளார். இதனை ஒரு மருத்துவ சாதனை என்றே குறிப்பிடலாம்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இதுவரைகாலமும் இருதய முடியுரு நாடிகளில் ஏற்படும் அடைப்புக்களுக்கான சத்திர சிகிச்சை, பிறப்பிலிருந்து இதயத்தில் ஏற்படுகின்ற அமைப்பு ரீதியான அசாதாரண மாற்றங்களுக்கான சீரமைப்பு சத்திர சிகிச்சை முதலான திறந்த இருதய சத்திரசிகிச்சைகளே மேற்கொள்ளப்பட்டன. எனினும் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் அவர்களால் இருதய வால்வு மாற்று சத்திர சிகிச்சையானது முதற்றடவையாக (Valve Replacement Surgery) 21.06.2018 அன்று முருகையா தயானந்தன் எனபவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உயர் கண்காணிப்பில் இருந்த தயானந்தனுக்கு இந்த சத்திரசிகிச்சையை இருதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் மேற்கொண்டமையானது முன்னுதாரணப்படுத்தத்தக்க உன்னதமான மருத்துவப் பணியாகும்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இருக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு வாரந்தம் இருவருக்கு மாத்திரமே திறந்த இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சிதம்பரநாதன் முகுந்தன் அவர்களும் அவருடன் இணைந்து உணர்வழியியல் சிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி சுந்தரலிங்கம் பிறேமகிருஸ்ணா மற்றும் ஏனைய துறைசார் சத்திரசிகிச்சைக் குழாமும் இணைந்து 2018 ஆடி 31 வரை 44 பேருக்கு திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை (Open Heart Surgery) வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். இதைவிட 6 பேருக்கு இருதயம் நுரையீரலுடன் தொடர்புடைய ஆபத்தான சத்திரசிகிச்சைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்காக 750 பேர் வரையில் காத்திருக்கின்றார்கள்.
திறந்த இருதய சத்திரசிகிச்சைகளை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு ரூபா 10 இலட்சம் முதல் 13 இலட்சம் வரை தேவைப்படும். எனவே இலங்கையின் வடபகுதியில் மட்டுமன்றி கிழக்குப் பகுதியிலும் உள்ள ஏழ்மையான இருதய நேயாயாளிகளின் உயிர்காப்பதற்கு யாழ் போதனா வைதத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவானது விரைந்து விரிவாக்கப்பட வேண்டும். ஏழை நோயாளிகளின் உயிர்காக்க தனியார் வைத்தியசாலைகளும் தங்கள் கட்டணத்தைக் குறைத்து இருதய சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.