எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (06.08.18) பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தப் பதவியைப் பெற்றுத் தருமாறு எந்தவொரு தரப்பினரும், தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி பதவியை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு வழங்க வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்பதனால், இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என சபாநாயகர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற நிலையியல் கட்டளையின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கு கூட்டு எதிரணிக்கு எந்த வாய்ப்பும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.