முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் திணிக்கப்பட்டுள்ள நிலையில் 60 அடி உயர தாதுகோபத்துடன் கூடிய விகாரையொன்றையும் பௌத்த பிக்குகளுக்கான விடுதியொன்றையும் அமைப்பதற்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கான அனுமதியை தொல்பொருள் திணைக்களம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்;. தேசிய வீடமைப்பு அதிகார சபையின், செல்வபுரம் மாதிரி வீட்டுத்திட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக, தமிழர்களின் பூர்வீகக் காணிகள், தொல்பொருளியல் திணைக்களத்தால் கையகப்படுத்துவதற்கு பல சூழ்ச்சிகள் நடைபெற்று வந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் 60 அடி உயரமான விகாரை, ஓய்வு மண்டபங்களை நிர்மாணிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் 2009 போருக்குப் பின்னரான ஒன்பது வருட காலப்பகுதியில் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.பௌத்தர்கள் வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாக வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.