வீதி விபத்தின் போது உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கும் வகையில் சட்டம் ஒன்றினைக் கொண்டு வர பங்களாதேஸ் அரசு முடிவு செய்துள்ளது. பங்களாதேஸில் அதிக அளவில் வீதி விபத்துகளும் அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 29-ந் திகதி இடம்பெற்ற விபத்தொன்றில் 2 மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.
வாகனத்தினை அதிவேகமாக செலுத்தியமை காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வீதி பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் உயிரிழப்பு ஏற்படுத்துவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.
கடந்த 10 நாட்களாக தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு 8 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்குடன் மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரச அதிகாரிகள் வீதி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்குகு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளனர்