இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.
பாராளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த ஜூலை மாதம் 1-ம் திகதியுடன் ஓய்வு பெற்றார். தற்போது வெற்றிடமாக இருக்கும் அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஹரிவன்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரி பிரசாத் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், துணை தலைவருக்கான தேர்தல் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது.
மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பா.ஜனதா முனைப்பு காட்டி வருகிறது.
இதற்கிடையே, பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவளிக்க உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.