வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தனது 3 நிபந்தனைகளுக்கு பகிரங்கமாக இணக்கம் தெரிவித்தால் தானே பதவி விலகுவேன். என அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளதுடன், தம்மீது எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் அநீதியாக பதவி நீக்கம் செய்ய முயற்சித்தமையினாலேயே தாம் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. அதன்போது அமைச்சர்கள் விடயம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சபைக்கு கொண்டுவந்த விசேட கருத்துரை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதன்போது மேலும் கூறுகையில், இங்கே உரையாற்றிய சிலர் முதலமைச்சர் மட்டுமா விட்டுக் கொடுக்கவேண்டும், ஏன் அமைச்சர் டெனீஸ்வரன் விட்டுக் கொடுத்து பதவி விலகினால் என்ன? என கேள்வி எழுப்புகிறார்கள். எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லாமல் அநீதியாக என்னை பதவி நீக்கம் செய்வதற்கு முதலமைச்சர் முயற்சித்தமையினாலேயே நான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். ஆகவே நான் விட்டுக் கொடுப்பதற்கு இயலாது.
அதேவேளை முதலமைச்சர் தாம் செய்தது தவறு என்பதை பகிரங்கமாக ஒத்துக் கொள்ளவேண்டும். மேலும் முன்னாள் போராளிகளுக்கு உதவும் வகையில் நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த செயற்றிட்டங்களை நான் அமைச்சு பதவியிலிருந்து நீங்கிய பின்னர் கைவிட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து செய்யவேண்டும்.
அடுத்ததாக மிக நீண்டநாட்கள் மிகுந்த சிரமப்பட்டு வடமாகாண போக்குவரத்து நேர அட்டவணை ஒன்றை தயாரித்திருந்தேன். அந்த நேர அட்டவணையும் கூட நான் அமைச்சு பதவியிலிருந்து நீங்கிய பின்னர் கைவிடப்பட்டிருக்கின்றது. அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த 3 நிபந்தனைகளையும் நடைமுறைப்படுத்தினால் நான் இப்போதும் பதவி விலகுவேன். முதலாவது நிபந்தனையை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தாவிட்டாலும் மிகுதியாக இருக்கும் 2 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் கூட நான் பதவி விலகுவேன் என்றார்.