வடமாகாணசபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறிய எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அமைச்சர்சபை குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 129வது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் குறித்த கருத்து ஒன்றை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சபைக்கு முன்வைத்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து சபையில், எதிர்கட்சி உறுப்பினர் அலிக்கான் ஷெரிவ் எழுந்து இந்த அவையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதனால் எதிர்கட்சியினராகிய நாங்கள் இந்த சபையில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நாங்கள் இந்த சபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம். என கூறினார்.
இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
எனினும் 2 எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபையில் இருந்தனர். அதனையடுத்து வடமாகாண அமைச்சர்கள் விவகாரம் குறித்து இறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும். என கூறிய அவை தலைவர் அரசியலமைக்கு அமைவாக அமைச்சர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் ஆளுநர் றெஜினோல்ட் கூரே ஆகியோரை கோருவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.