மட்டகளப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்…
மக்களை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம் என்று கூறியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ் மக்களின் வளங்களை சுரண்டும் வகையிலான தொழிற்சாலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த திட்டத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த இடமளிக்காது என்று குறிப்பிட்ட அவர் மக்கள் சார்பில் இவைகளை எதிர்க்கும் தம்மை இனவாதிகளாக சித்தரிக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலையினை மூடுவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை கிராமத்தில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைக்கப்படும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் தொழிற்சாலைக்கு எதிராக 5 வது தடவையாக போராட்டத்தில் ஆர்ப்பட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியிடம் சொல்வொம் என்ற தொணிப்பொருளிலான இப் போராட்டத்தின் ஐந்தாவது போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. தொடர்புடைய தொழிற்சாலை முன் ஒன்றுகூடிய பொதுமக்கள் தொழிற்சாலைக்கெதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பிதேசசபை உறுப்பினர்கள் தம்பிட்டிய ஞானானந்த தேரர் (மட்டக்களப்பு மாவட்ட பௌத்த பிக்குகள் சங்கத்தின் தலைவர்) என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன் தமிழ் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அந்த பிரச்சினைகளை கட்சி ரீதியாகப் பார்க்காமல் எமது இனம் சார்ந்து அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும் என்றும் கூறினார்.
குடிநீருக்கே மக்கள் தவிர்க்கும் பகுதியிலிருந்து நீரை ஊறுஞ்சி போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் செயற்பாட்டினை யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது என்றும் உன்னிச்சைக் குளத்திலிருந்து பெறப்படும் நீர் நகரப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது குளத்தினை அண்டியுள்ள மக்கள் குடி நீருக்கு பிரதேச சபை பவுசர்களை நம்பி வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
பெரிய புல்லுமலையில் போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஒரு போதும் அனமதிக்க மாட்டோம் எனக் கூறிய அவர் இந்தவிடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் உறுகாமத்தில் முஸ்லிம் மக்களும் மங்களஹமயில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் மூவின மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கையெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.