எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நிலவும் முரண்பாடுகள் குறித்து, ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆராயவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டம், முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நாளை (14.08.18) இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதியன்று கொழும்பில் நடத்தவிருக்கின்ற, அரசாங்கத்துக்கு எதிரான பேரணி தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம், அரசமைப்பிலோ அல்லது சம்பிரதாயத்தின் பிரகாரமோ இல்கையென, சபாநாயகர் கரு ஜயசூரிய, கடந்த வௌ்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் செயற்படுவார் எனவும் அவ்வறிவிப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.