அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகவேண்டும்…
வடமாகாணசபையின் அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதிமன்றம் டெனீஸ்வரன் தொடர்பாக விடுத்த உத்தரவை தொடர்ந்து அமைச்சரவையின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வடமாகாண சபை அமைச்சர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது, இதன் காரணமாக மாகாணசபை முடிவுகளை எடுக்க முடியாதநிலைக்கும் சட்டங்களை நிறைவேற்றமுடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய அமைச்சர்கள் பதவி விலகி புதிய அமைச்சர்கள் பதவியேற்பதற்கு வழிவிடுவதே இந்த நெருக்கடிக்கான சிறந்த தீர்வாக அமைய முடியும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் கீழ் முதலமைச்சரிற்கே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது ஆளுநர் என்ற அடிப்படையில் எனக்கு அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ள ரெஜினோல்ட் குரே இதன் காரணமாக முதலமைச்சர் இந்த விவகாரத்திற்கு உடனடியாக தீர்வை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.