வவுனியா, கூமன்குளம் பகுதியில் கிணற்றில் இருந்து இரண்டு சடலங்கள் இன்று (15.08.18) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூமன்குளம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய மயூரன் ராஜினி என்ற தாயும், அவருடைய 5 வயதான மயூரன் சச்சின் எனும் மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாயும், மகனும் வாழ்ந்து வந்த வீட்டிற்கு முன்னால் உள்ள கிணற்றில் இருந்தே குறித்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரது மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தாயின் மூத்த பிள்ளை வீட்டிற்கு வந்து தாயை தேடிய சந்தர்ப்பத்திலேயே தாயினதும் சகோதரனினதும் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.