சி.தவராசா, எதிர்க்கட்சித் தலைவர், வ.மா.ச
பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறின் அது மெய்யாகும் என்று சிலர் நம்பிச் செயற்படுவதுண்டு. அவ்வாறு செயற்பட்டவர்களில் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர்கள் ‘அடொல்ப் ஹிட்லர்’ உம் அவரது பரப்புரை மந்திரி ‘கோபெல்ஸ்’ உம் ஆகும் . அவர்களின் அந் நம்பிக்கை பிழை என்பதனை சரித்திரம் நிரூபித்துள்ளது. அதே போல்தான் வடக்கு முதலமைச்சர் மீண்டும் மீண்டும் பொய்யுரைப்பதன் மூலம் மக்களை நம்பவைக்கலாம் என்று கருதுகிறார் போலும்.
நேற்றைய தினம் (16.08.2018) யாழ் போதனா வைத்தியசாலையின் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது முதலமைச்சர் ‘நல்லவர்களை திறனுடையவர்களை இங்கு விட்டுவைக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. கௌரவ பள்ளிகக்கார என்ற ஒரு சிறந்த ஆளுநர் இங்கு இருந்தார். அவரை இங்கிருந்து ஒரு வருடத்தில் மாற்றி ஒரு அரசியல்வாதியைக் கொண்டு வந்தார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்று கூறுவார்கள். முதலமைச்சரின் இவ்வுரை எனக்கு அவ்வாறே படுகின்றது. பள்ளிகக்கார ஆளுநராக 2015 ஜனவரி மாதத்தில் நியமனம் பெற்று வந்திருந்தார். முதலமைச்சரினால் பள்ளிகக்கார அவர்களிற்கு 2016 ஆரம்பத்தில் அனுப்பிய கடிதமொன்று மிகக்காரசாரமாக எழுதப்பட்டது மட்டுமல்ல, அக் கடிதத்தில் ‘This amounts to cannibalism’ என்ற வார்த்தைப் பிரயோகமும் அமைந்திருந்தது. இதனால் மிகவும் வேதனையடைந்த பள்ளிகக்கார தனது இராஜிநாமாவைக் கொடுத்து 2016 பெப்ரவரி மாதம் பதவியிலிருந்து விலகினார். ‘Cannibalism’ என்பது தமது இனத்தின் மாமிசத்தினைத் தாமே உண்பதனைக் குறிப்பிடுவது ஆகும். இக் கடிதத் தொடர்பாடலின் பின் பள்ளிகக்கார அவர்கள் தனக்கு நெருங்கியவர்களிற்குக் கூறிய வார்த்தை ‘I am thoroughly heart. u;e is an educated person. I am also an educated. I know what he intended to do.’ பள்ளிகக்காரவுடன் நெருங்கிப் பழகியவர்கள் இதற்குச் சாட்சியாக இருக்கின்றார்கள்.
மேலும் முதலமைச்சர் தனது உரையில் ‘அவரின் (தற்போதைய ஆளுநர்) நடவடிக்கைகள் எங்களைக் கோட்டு வரை கொண்டு சென்றுள்ளது’ எனவும் ‘முதலமைச்சரால் அவரிற்கு சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 20ந் திகதி அனுப்பப்பட்ட அமைச்சர் ஒருவர் பற்றிய தீர்மானம் இது வரையில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை’ எனவும் குறிப்பிட்டுள்ளமை ‘மொட்டைத் தலைக்கும் முழந்தாளிற்கும் முடிச்சு போடும்’ கதையாக அமைந்துள்ளது.
முதலமைச்சரினால் டெனிஸ்வரன் அவர்களிற்கு முகவரியிடப்பட்டு 20.08.2017இல் அனுப்பப்பட்ட கடிதத்தில் டெனிஸ்வரன் அவர்களை அவர் வகித்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதாகவும் அவரிடமிருக்கும் அலுவலக ஆவணங்கள் யாவற்றினையும் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் எழுதிய கடிதம் செல்லுபடியற்றது என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவை விதித்துள்ளது. உண்மை நிலைமை இதுவாக இருக்க ஆளுநரினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாமையினாலேயே கோட்டு வரை சென்றுள்ளதெனக் கூறியிருப்பது முழுப் பூசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும்.
முதலமைச்சர் தொடர்ச்சியாக இவ் விடயம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பாகவும், உண்மையைத் திரிபு படுத்தியும் கூறி வருவது மக்கள் விளக்கமில்லாதவர்கள் அவர்களிற்கு திரும்பத் திரும்ப பொய் உரைப்பதன் மூலம் அவர்களை நம்ப வைக்க முடியும் என்ற நம்பிக்கையிலா என்று எண்ணத் தோன்றுகின்றது.
1 comment
விக்னேஸ்வரனைப் பற்றி தவறான கருத்தை உருவாக்க தவராசா முயற்சிக்கிறார்