குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டு போட்டியிடும் வாய்ப்புக்கு தடை ஏற்படுத்தினாலும் எதிர்காலத்தில் ஒரு நாள் நாமல் ராஜபக்ச நாட்டின் தலைவராக பதவிக்கு வருவதை எவருக்கும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாக நுகோகொடையில், அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச உட்பட நான்கு ராஜபக்சவினரின் ஜனநாயக உரிமைகளை பறிக்க மேற்கொண்டுள்ள முயற்சியை உலகில், மனித உரிமைகளை மதிக்கும் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் ஆட்சியாளர்களுக்கு ஒரு நாள் படுகுழியாக மாறும். சட்டத்திட்டங்கள், வதைகள், தடைகள் மூலம் மக்களின் ஆதரவை வென்றெடுத்தவர்களின் எதிர்கால பயணத்தை நிறுத்த முடியாது. நாடு தற்போது அராஜக நிலையில் உள்ளது. நாட்டின் பொறுப்பு மகிந்த ராஜபக்சவின் கைகளுக்கு செல்ல வேண்டும் என நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கூறுகின்றனர்.
கிராமத்திலும் நகரத்திலும் தொழில் நிலையங்களிலும் இந்த குரல் உரத்து கேட்கிறது. எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பு அதிரும். மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஆணையை வழங்க மக்கள் தயார். 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து அந்த உரிமையை பறித்தனர். அது அவசரத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். இதன் மூலம் பசில், கோத்தபாய, நாமல் ஆகிய மூவருக்கும் தடையேற்படுத்தினர். இது ஜனநாயக விரோதம். மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் குமாரசிறி ஹெட்டிகே குறிப்பிட்டுள்ளார்.