கேரளாவில் பெய்துவரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் ராணுவத்தினர் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் 14 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி உள்ளன.
இதனைத் தொடர்ந்து அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அதிகப்படியான நீரி தாழ்வான பகுதிகளை நோக்கி பாய்வதனால் மொத்த மாநிலமும் பெருங்கடலுக்குள் சிக்கியிருப்பது போன்ற சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும் சில இடங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கும் சேறும் சகதியுமாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குழுவுக்கு தலா 65 ராணுவ வீரர்கள் தனித்தனியக பிரிந்து 10 மாவட்டங்களில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளை இணைக்கும் வகையில் 13 தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 22 வெளிநாட்டவர்கள் உள்பட 3627 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.