ஊடகங்கள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்ட ருவிட்டர் பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து , அங்குள்ள 350 செய்தி நாளிதழ்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. ஊடகங்களில் தன்னை பற்றி விமர்சனமாக வரும் செய்திகளுக்கு டிரம்ப் கடுமையான எதிர்வினையை தெரிவித்துவரும் நிலையில் நேற்றையதினம் அமெரிக்காவின் முன்னணி செய்தி நாளிதழ்கள் மற்றும் காட்சி ஊடகங்களை குறிப்பிட்டு பொய் செய்தி ஊடகம் என பதிவிட்டிருந்ததுடன் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் செயல்படும் இத்தகைய ஊடகங்கள் அமெரிக்காவுக்கே தீங்கு எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து அங்குள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட செய்தி நாளிதழ்கள் இன்று டிரம்ப்பை விமர்சித்து தலையங்கம் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியின் அறிக்கைகள், பத்திரிக்கைச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாகவும், செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.