by admin

வாரத்துக்கொரு கேள்வி – 18.08.2018
நெடுந்தீவு ஜெயபாலன் அவர்களால் யாழ் தினக்குரல் சார்பில் தரப்பட்ட மூன்று கேள்விகளுக்கு இவ் வாரம் பதில் தரப்படுகின்றன. கேள்விகள் பின்வருமாறு –
1. கேள்வி – வடக்கு மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகள் தவிர்ந்த அமைச்சுக்கள் திணைக்களங்களில் 7510 அங்கீகரிக்கப்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் ஆண்டுகளாக இவற்றை நிரப்ப முடியாதது ஏன்?
பதில் – மொத்தம் 6338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்கள் 3329. மாகாண அரசினால் நிரப்பப்பட வேண்டியவை 3009.

இந்த வெற்றிடங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுகின்றன. இளைப்பாறல்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள், இறப்புக்கள் எனப் பல காரணங்களால் இந்த வெற்றிடங்கள் ஏற்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தினத்தில் வெற்றிடங்கள் உருவாவதில்லை. நாளாந்தம் இவை மாறிக்கொண்டேயிருப்பன. ஒவ்வொரு சேவையிலும் கணிசமான அளவு வெற்றிடங்கள் ஏற்பட்ட பின்னரே சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டும் தகைமையுடையோர் முன்னிலையாகாத சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களைக் குறிப்பிடலாம். மேசன்மார்கள், குழாய் பழுது பார்ப்பவர்கள், பம்புகளை இயக்குபவர்கள், மரவேலை செய்வோர், தையல்க்காரர்கள் எனப் பலரின் வெற்றிடங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. எனினும் காலத்திற்குக் காலம் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டே உள்ளன. உதாரணத்திற்கு நேற்றைய தினம் நாம் 110 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நியமனங்கள் கையளித்தோம். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

தற்போது எம்மால் நிரப்பப்பட வேண்டியவை 3009. ஆனால் புதிதாக நேற்று நியமனம் கொடுக்கப்பட்டவர்களும் அந்தத் தொகையினுள் அடங்குகின்றனர்.
தவணைக்குத் தவணை நாம் கொடுத்துவந்து கொண்டிருக்கின்ற நியமனங்கள் பற்றிய முழு விபரங்களையும் கோரியுள்ளேன். அவை கிடைத்ததும் உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.

மாகாணசபையின் நிர்வாகத்தில் இருக்கும் பதவிகள் அனைத்தினது தொகை 40422. இவ்வளவு ஆளணியும் மத்திய அரசினாலும் மாகாண அரசினாலும் நிரப்பப்படுகின்றன. மாகாண அரசினால் நிரப்பப்படவேண்டிய ஆளணியில் 31.07.2018 அன்று வெற்றிடமாக நிரப்பப்படவேண்டிய ஆளணியினர் 3009. இது 7.4மூ (3009ஃ40422ழூ100ஸ்ரீ 7.4) ஆகும்.

2. கேள்வி – வடக்கில் பல ஆயிரக்கணகக்கில் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருக்கும் நிலையில் இவ்வாறு பெருந்தொகையான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றமையால் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதே?
பதில் – பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலைவாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள். அதாவது குறிப்பிட்ட பதவி வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்பற்றவர்கள் தகைமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வாகன சாரதி வெற்றிடம் ஒன்று இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஐம்பது பேர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேலையின்றி இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐம்பது பேருக்கும் சாரதி தேர்ச்சிப் பத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது? பதவி வெற்றிடமாக இருக்கும்; ஐம்பது பேரும் வேலையற்றிருப்பார்கள். ஆகவே வேலையற்றிருப்போர் யாவரும் எமக்கிருக்கும் பதவி வெற்றிடங்களை நிரப்பத் தகைமை பெற்றவர்கள் என்று நினைத்து எம்மைக் குறை கூறுவது முறையாகாது.
பல வெற்றிடங்களை நிரப்பத் தோதான தகைமை உடையவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இது கல்வித் தேர்ச்சியில் உயர் நிலை அடைந்தவர்களுக்கும் பொருந்தும்; கல்வி நிலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி பெற்று உயர் நிலையை அடையும் எம்முட் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும். அவர்களால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களும் எமது வெற்றிடப் பட்டியலில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இல்லாததால் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்ப முடியாதிருக்கின்றது. அதே போல் தொழிற்கல்வி கற்று சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகள் தேடிச் செல்வதால் இங்கு ஏற்படும் வெற்றிடங்கள் பல தொடர்ந்து நிரப்பப்படாது இருப்பதையும் நீங்கள் உணர வேண்டும். தொழில்த் திறன் உள்ளவர்கள் இல்லாததால் வடமாகாணம் படும் அவஸ்தையை நீங்கள் உணர வேண்டும். தாதிகளுக்கு வெற்றிடம் உண்டு. தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால் நாம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம். நிரப்பிய பின்னரும் வெற்றிடங்கள் பல உண்டு. நீங்கள் கூறும் வேலையற்றவர்களை நாம் தாதியர்களாக நியமிக்கலாமா? அவர்களுக்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் தகைமை இருக்க வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதா அல்லது வடக்கு மாகாணசபைக்குத் தமிழ் இளைஞர் யுவதிகள் அநீதி இழைத்துள்ளார்களா? இலகுப் பாடங்களைப் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் வேலைவாய்ப்பின்றி இருப்பது அவர்கள் எமது வெற்றிடங்கள் பலவற்றை நிரப்பத் தகுதி இல்லாததன் காரணத்தால். இதனால்த்தான் எமது தேவைகளுக்கு ஏற்பவும் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று கூறி வருகின்றோம்.

3. கேள்வி – வடக்கில் வேலைவாய்ப்புக்களை வழங்கும் சந்தர்ப்பம் இருந்தும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வடக்கு மாகாணசபை தவறியுள்ளமை வடக்கு மாகாணசபையின் செயற்றிறன் அற்ற செயற்பாடாக கருத முடியாதா?
பதில் – முன்னைய கேள்விகளுக்கு நாம் கூறிய காரணங்கள் உங்களுக்கு எமது இடர் நிலையையும் இக்கட்டான நிலையையும் உணர்த்தி இருக்கும். எமது வடமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்கள் தான் இவ்வாறான குற்றங்களை முன்வைத்து வருகின்றனர். அடுத்த தேர்தலுக்கான முனகல்கள் இவை. முன்பும் வெற்றிடங்கள் இருந்தன. இவர்களோ நீங்களோ கேட்கவில்லை. திடீரென்று பதவி முடியும் காலத்தில் இவற்றை எழுப்பக் காரணம் என்ன? வாசகர்கள் பதில் அறிவார்கள். வேலைவாய்ப்புக்களை வழங்க இருக்கும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது தவறான கருத்து. நாம் காலத்துக்குக் காலம் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை எடுத்தே வருகின்றோம். அதில் பல சிக்கல்கள், தடைகள் எமக்கிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இன்னமும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ்த்தான் பதவி வகித்து வருகின்றோம். நேற்றைய தினந்தான் சுகாதாரத் தொண்டர்கள் பலர் வந்து என்னைச் சந்தித்தார்கள். அவர்களுள் பலர் அடிப்படைக் கல்வித்தகைமை அற்றவர்கள். ஆனால் பல வருட காலம் தொண்டர்களாகத் தொழில் புரிந்து வருபவர்கள். வெற்றிடங்களை வெளியில் இருந்து கல்வித் தகைமை பெற்றவர்களைக் கொண்டு நிரப்பலாம். அப்போது சுகாதாரத் தொண்டர்கள் பலர் தெருவிற்குச் செல்லவேண்டிவரும். தற்போது எமது புள்ளி விபரங்கள் அவர்கள் செய்யும் வேலைகளையும் வெற்றிடங்களாகவே காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தொண்டர்களாகக் கடமையாற்றுகின்றார்கள். அவர்களை வேலைகளில் ஈடுபடுத்த பல தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கின்றது. அவர்களின் கல்வித் தகைமையை, வயதெல்லையைத் தாண்டிய அவர்களின் வயது என்று பலவற்றை நாம் தாண்டியே அவர்களுக்கு நியமனங்கள் அளிக்க வேண்டிவரும்.
தொண்டர் ஆசிரியர்கள் பலர் தமது தொடர்ந்த சேவையினை நிரூபிக்க முடியாத நிலையில் நியமனம் பெறமுடியாதவர்களாக இருந்தார்கள். டுழப டீழழம (பதிவுப் புத்தகம்) காணாமல் போனமையே அதற்குக் காரணம். அவர்களிடமிருந்து சில நிபந்தனைகளுக்கு அமைவாக சத்தியப் பத்திரங்கள் பெற்று நியமனங்களை வழங்கலாம் என்று நானே சிபார்சு செய்து அண்மையில் பல இடர்பாடுகளுக்குப் பின்னர் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. எத்தனை சத்தியாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், சண்டை, சச்சரவுகள் என்பவற்றைத் தாண்டி அவர்கள் தமது நியமனங்களைப் பெற்றார்கள் என்று அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுள் நியமனம் பெற்ற ஒருவர் வந்து ‘உங்கள் செயற்றிறனால்த்தான் எமக்கு நியமனம் கிடைத்தது’ என்று என்னிடம் கூறும் போது கண்ணீர் வடித்தார். அதே நபர் சென்ற வருட இறுதியில் என் அலுவலக அறையில் கத்திக் கூப்பாடு போட்டு தர்க்கித்தவர். ஆனால் அவரின் மேல் எனக்குக் கோபம் வரவில்லை. அனுதாபமும் அன்புமே மேலோங்கியிருந்தது. அதை அவர் புரிந்து கொண்டிருந்ததால்த்தான் வேலை கிடைத்ததும் கண்ணீர் உகுத்தார். நாங்கள் செயற்றிறனுடன் தான் செயற்படுகின்றோம். வெளியில் இருந்து குற்றம் சுமத்துவது இலகுவானது. தடைகளை நீக்கி, தகைமையை உறுதி செய்து, தகுந்தவர்களை உள்ளேற்பது அத்தனை சுலபமான காரியமல்ல.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More