எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி தேசிய அரசாங்கத்தை வீழ்த்தும் பகல் கனவுடன் பொது எதிரணியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர் எனவும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மஹிந்த தரப்பினர் போராட்டங்களை மாத்திரமே முன்னெடுத்துள்ளனர் எனவும் ஆனால் அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை எனலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டு உருவாக்கப்படவில்லை எனவும் மக்களின் அமோக ஆதரவுடனேயே ஏற்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.இவ்வெற்றியானது தொடர்ந்து இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது எனவும் அன்றிலிருந்து இன்றுவரை தேசிய அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில் சிறப்பாகவே செயற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் செயற்படும் போது சில குறைப்பாடுகள் காணப்படுவது இயல்பு என்ற போதிலும் கடந்த அரசாங்கத்தினை போன்று குறைப்பாடுகளே அரசாங்கம் என தேசிய அரசாங்கம் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை கொண்டு எதிர்தரப்பினர் ஊழல் மிகுந்த அரசாங்கம் என குற்றம் சுமத்துகின்றனர் எனவும் பிணைமுறி மோசடியை மறைக்கவில்லை எனவும் சுயாதீனமாக விசாரனைகள் அமைத்து விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் குற்றத்துடன் தொடர்புடையவர்கள் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இது போன்ற சுயாதீனமாக செயற்பட கூடிய எந்த அமைப்புக்களும் காணப்படவில்லை எனவும் நீதித்துறையின் சுயாதீனம் கூட மழுங்கடிக்கப்பட்டதெனவும் சட்டவாட்சி கோட்பாட்டிற்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசர் சிறியானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போராட்டம் ஒன்றும் தமக்கு பெரும் சவால் அல்ல எனவும் வெகுவிரைவில் எதிரணியின் பேச்சுக்கள் அனைத்தும் முடக்கப்படும் எனத் தெரிவித்த அவர் அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைப்பபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டிற்கு பின்னரும் தேசிய அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கான கொள்கைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.