பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி. பதவிவிலகியுள்ளார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2017-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில், வாரியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக வாக்களித்து 2020-ம் ஆண்டு வரை மீண்டும் தலைவராக தேர்வு செய்தனர்.
இவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணத்தினைக் கைப்பற்றியதுடன் இருபதுக்கு இருபது போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்ததுடன் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் பஞ்சாப் மாகாணத் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகளுக்கு நஜம் சேதி துணையாக இருந்ததாக இம்ரான் கான் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த நஜம் சேதி இம்ரான்கான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தநிலையில் அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்து அந்த கடிதத்தை இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தை ஏற்றுகொண்ட இம்ரான் கான், உடனடியாக எஸ்சன் மனி என்பவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளார்.