யாழ். மாவட்டத்தில் 5 துறைமுகங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் துறை அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா தெரிவித்துள்ளார்.
அத்துடன், 20 இடங்களில் இறங்குதுறைகளையும், ஆழப்படுத்தப்படவுள்ள பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும், அந்த இடங்களை தெரிவு செய்து, தொழில்நுட்ப ரீதியாக செய்ய வேண்டிய விடயங்களை அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கடற்றொழில் சங்கத்தினரை நேற்று (21.08.18) இரவு யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடிய அவர்,மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பாரிய பிணக்குகள் இருக்கின்றதை மறுக்கவில்லை. ஓரே நேரத்தில் தீர்த்து வைக்க முடியாது. அனைத்து மீனவ சங்கத்தினரையும் அழைத்து கருத்துப் பரிமாற்றத்தினை ஏற்படுத்தி, அதன் ஊடாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு ஏற்றவகையில், முதலாவதாக யாழ். மாவட்டத்தனைத் தெரிவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். வட பகுதியில் அரசியல், சமூக, பொருளாதாரம் கலாசார ரீதியாகவும், பல வகையிலும் பின்னடைவினை எதிர்நோக்கியிருந்தார்கள். வட பகுதியில் வாழ்ந்த மக்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நம்பிக்கை இழந்தவர்களாக இருந்ததுடன், எதிர்காலம் பற்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத கால கட்டத்தினை கடந்து வந்துள்ளார்கள். எனவே தார்மீக ரீதியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் இந்தப் பிரதேசங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மத்தியில் நல்லாட்சியை ஏற்படுத்த ஜனாதிபதியும், பிரதமரும் இயன்ற அளவு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். மக்கள் சுபீட்சத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளோம். இந்த நிலமைகளில் தாக்கங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது. அந்நிய செலவாணியைப் பெற்றுத் தரும் கடலட்டை தொழில் வளர்ச்சியடைய வேண்டும். கடலட்டை தொழிலை எமக்கு சாதகமான முறையில் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.” எனவும் தெரிவித்துள்ளார்.