குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கிராம மக்கள் போக்குவரத்தில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். குறித்த கிராமத்தில் வாழ்கின்ற நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பூநகரி நகருடான தேவைகளுக்கு வந்து செல்வதில் நாளாந்தம் பெரும் நெருக்கடிகளை முகம் கொடுத்து வருகின்றனர் குறிப்பாக மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் வந்து போகுகின்ற பொது மக்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக காணப்படுகிறது.
கௌதாரிமுனையிலிருந்து தினமும் காலை ஏழு மணிக்கு பூநகரி வாடியடி சந்தியை நோக்கி புறப்படும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து பின்னர் வாடியடியிலிருந்து மாலை ஜந்து மணிக்கு கௌதாரிமுனை நோக்கி செல்கிறது. இதற்கிடையில் எவ்வித போக்குவரத் ஏற்பாடுகளும் இல்லை.
பூநகரி யாழ்ப்பாணம் ஏ32 வீதியிலிருந்து 18 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கௌதாரிமுனை கிராமம் அமைந்துள்ளது. காலையில் புறப்படுகின்ற பேரூந்தில் கிராமத்தில் இருந்து புறப்படும் மக்கள் தங்களின் தேவைகள் சில மணித்தியாலயங்களில் நிறைவுற்ற பின்னர் மாலை ஜந்து மணிவரை பூநகரி வாடியடியில் காத்திருக்க வேண்டும். அல்லது மன்னார் யாழப்பாண பேரூந்தில் பயணித்து கௌதாரிமுனைக்கு செல்கின்ற சந்தியில் இறங்கி கிராமத்திற்கு செல்கின்ற உந்துருளிகள், வாகனங்கள், மற்றும் டிப்பர்களை மறித்து ஏறிச் செல்ல வேண்டும் சில சமயங்களில் எவையும் இல்லாது விடத்து 18 கிலோ மீற்றர் நடந்து சென்று ஊரை அடைய வேண்டும். பெரும் கைகுழந்தைகளுடன் காணப்படும் தாய்மார்களி்ன் நிலைமை பரிதாபமாக காணப்படுகிறது.
அத்தோடு குறித்த சந்தியில் வெயிலுக்கு ஒதுங்கி நிற்பதற்கு கூட பெரூந்து தரிப்பிடம் கூட இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் கடும் வெயிலில் பொது மக்கள் காத்திருக்கும் நிலைமையும் காணப்படுகிறது. தங்களி் நிலைமை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், மற்றும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் பல தடவைகள் எடுத்துக் கூறிய போது இதுவரை எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என கௌதாரி முனை மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.