தமிழீழ விடுதலைப்புலிகள் எனப் பெயர் குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றுடனும், ஏனைய சில ஆயுதங்களுடனும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி புஸ்பதான மாவத்தையிலுள்ள இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றில் வைத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிகள் மூன்றும், அதற்கான ரவைகளும் வாள் மற்றும் போலியான வாகன இலக்கத்தகடுகள், கைதிகளுக்குப் போடப்படும் கைவிலங்கு சோடி ஒன்று என்பனவற்றை விசேட காவல்துறை அதிரடிப்படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றியுள்ளனர். அத்துடன் ஆயுதங்களுடன் அங்கு இருந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை வீட்டு உடைமையாளர் அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்ககப்படுகின்றது. சந்தேக நபரும் அவரது மகனும் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது மேற்படி வீட்டுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதி நவீன உயர் வலுக்கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் இவ் முற்றுகையின் போது வீட்டிலிருந்த ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆறுபேர் சிங்களவர்கள் என்றும் ஒருவர் தமிழர் என்றும் தெரியவருகிறது.
கைதுசெய்யப்பட்டவர்கள் பன்வில, பேராதனை, குருநாகல் முதலான இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே சில குற்றங்களுக்காக தேடப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட ஒருவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அரசியல் நோக்கம் கருதி, பாரியதொரு சம்பவத்தை மேற்கொள்வதற்கு இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்றும் அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்த முனைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.