குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மயிலிட்டி துறைமுக புனரமைப்புக்காக அடிக்கல் நாட்டும் விழா நடக்கும் இந்த நேரத்தில் மயிலிட்டி மக்கள் சொந்தமண்ணில் வாழாது கண்ணீருடன் இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். அந்த மக்களின் கண்ணீருடன் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி துறைமுகம் அடிக்கல் நாட்டும் விழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது அந்நிகழ்வின் பிரதம விருந்தனரான ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா முன்னிலையில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், மயிலிட்டி மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வதற்காக பல்வேறு தியாகங்களை செய்தார்கள். பல போராட்டங்களை செய்தார்கள். அதனால் இன்று மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுஇ அதற்கான அடிக்கல்லை ஜனாதிபதி நாட்டியுள்ளார்.
ஆனால் மயிலிட்டி மக்களுக்கு சொந்தமான மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுவதற்கான விழா எடுக்கப்படும் நிலையில் மயிலிட்டி மக்கள் தமது சொந்த நிலத்தில் வாழ இயலாதவர்களாக இருக்கின்றார்கள்.
30 வருடங்களாக சொந்த மண்ணில் வாழ இயலாமல் இடம்பெயர்ந்து அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுடைய கண்ணீருடன் தான் இந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்களுடைய துயரத்தை மறந்து என்னால் பேச இயலாது.
எங்களுடைய மக்கள் இந்த மண்ணை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடாத்தியுள்ளார்கள். அதன் விளைவாக இன்று மயிலிட்டி துறைமுகம் விடு விக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் போதாது. இந்த மண்ணில் இன்று ஒரு பெரிய விழா நடாத்தப்படுகிறது. ஆனால் இந்த மண்ணுக்கு சொந்தமான மக்கள் இங்கே இல்லை. ஜனாதிபதி வருகையின்போது எங்களுடைய மண்ணுக்காக நாங்கள் போராடவேண்டும் என கேட்டு மக்கள் என்னிடம் வந்தார்கள்.
நான் உடனடியாகவே பிரதமருடன் பேசினேன். 30 வருடங்களாக சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் இடம்பெயர்ந்து அவலங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களுடைய கண்ணீரை சிந்தித்து பாருங்கள் என பிரதமருக்கு நான் கூறியிருக்கிறேன்.
அவர்கள் இல்லாத இந்த விழாவை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அந்த மக்களின் கண்ணீருடனேயே நான் இந்த மேடையில் நிற்கிறேன்.
அவர்கள் பட்ட துன்பங்களை, போராட்டங்களை, தியாகங்களை மறந்து நான் பேச இயலாது. தங்களுடைய சொந்த மண்ணில் வாழ விடுங்கள் என கேட்ட மக்கள் மீது புலனாய்வாளர்கள் தாக்குதல் நடாத்தினார்கள்.
கழிவு ஒயிலை ஊற்றினார்கள். அந்த நாளை நாங்கள் மறக்க தயாரில்லை. ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதியான நீங்கள் பேசினீர்கள் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது மஹிந்த ராஜபக்சவுக்கு தெரிந்திருந்தால் இறந்திருப்பேன் என. அவ்வாறான சந்தர்ப்பத்தை நாங்களும், எங்கள் மக்களும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். நாங்கள் கேட்காமல் எங்கள் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள். அந்த நன்றியை மறக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.
இந்த வருடத்திற்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணும் முடிவை துணிந்து எடுங்கள். மக்களுடைய நிலங்களை மக்களிடம் கொடுங்கள். நாங்கள் இன்னும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
6 மாதங்களில் மக்களின் காணிகளை விடுவிப்பேன் என்றீர்கள் இன்றளவும் அது பூரணமாக நடக்கவில்லை. ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதனை நெஞ்சில் நிறுத்தி செயற்படுங்கள் என தெரிவித்தார்.