இலங்கை பிரதான செய்திகள்

யாழ் வைத்திய சாலைக் கழிவு நீர் உரிய நியமங்களுக்கு அமைய சுத்திகரிக்கப்படவில்லை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.போதனா வைத்திய சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் உரிய நியமங்களுக்கு அமைய சுத்திகரிக்கப்படாது கடலில் கலக்க விடப்படுவதாக எழுந்துள்ள குற்றசாட்டை அடுத்து வைத்திய சாலை பணிப்பாளர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

யாழ்.மாநகர சபையில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, யாழ் போதனா வைத்தியசாலையின் உயிரியல் கழிவுகளை அகற்றும் பொறுப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் உயிரியல் கழிவுகளை சுத்தம் செய்யாமல் நேரடியாக கடலுக்குள் கொட்டுகிறது. இது மிக ஆபத்தானது. கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், கடற்றொழிலாளர்களும் ஆபத்தை எதிர்கொள்வார்கள்.

கழிவகற்றலிற்காக இந்த நிறுவனத்திற்கு போதனா வைத்தியசாலை நிர்வாகம் பெருந்தொகை பணம் வழங்குகிறது. ஆனால் நிறுவனம் தனது பணியை சரியாக செய்யாமல், யாழ் சிறைச்சாலைக்கு அருகான பகுதி ஊடாக கழிவுகளை கடலுக்குள் கொட்டுகின்றது என்று சபையில் எடுத்துக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் உண்மையானது என யாழ் மாநகரசபை ஆணையாளரும் குறிப்பிட்டார். எனினும், இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் சட்டவலு இல்லாததால் தலையிட முடியாதுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல் குடாக்கடலில் கலக்க விடுதல் தொடர்பாக மாநகர சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.

வைத்தியசாலையிலிருந்து, யாழ். பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படும் கழிவு நீர் உரிய நியமங்களுக்கு அமைய சுத்திகரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பரிசோதிப்பதற்காக நேரடியாக ஆராயுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளரைக் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் இன்று காலை குறிப்பிட்ட சுத்திகரிப்பு நிலையத்துக்கு நேரில் சென்றிருந்தார்.

அந்த இடத்துக்குச் சென்ற போது, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியதோடு, விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.