ஒரு பெண் செயற்பாட்டாளர் உள்பட ஐந்து மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சவூதி அரேபிய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பயங்கரவாத வழக்குகளுக்கான தீர்ப்பாயம் ஒன்றில், இந்த செயற்பாட்டாளர்கள் பதற்றம் நிறைந்த குவாட்டிப் பிராந்தியத்தில் போராட்டங்களில் பங்கேற்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் சிறுபான்மை சமூகத்தினரான ஷியா முஸ்லிம்களால் குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் சவூதி அரேபியாவில் உரிமைகள் தொடர்பாக போராடி மரண தண்டனை பெறும் முதல் பெண்ணாக இஸ்ரா இருப்பார் என நம்பப்படுகிறது. சவூதி அரேபியாவின் இந்த நடவடிக்கை, பொதுவெளியில் வராத ஏனைய பெண் செயற்பாட்டாளர்களுக்கு ஆபத்தான ஒரு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கூறி கடந்த மே மாதத்தில் 13 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும், ஏனையவர்கள் எவ்வித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பெண் செயற்பாட்டாளர் இஸ்ராவும், அவரது கணவரும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.