யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸவிகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மாகாத்மாகாந்தி, நெல்சன்மண்டேலா, அன்னை திரேசா, ஆப்பிரகாம்லிங்கன் ஆகியோருக்கு முன்பதாகவே இரக்கம், கருணை, அன்பு உள்ளிட்ட தர்மத்தை போதித்தவர் புத்த பெருமான் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிவடைந்த காங்கேசன்துறை தையிலிட்டி திஸ்ஸ விகாரையினை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான தொடக்க விழாவில் நேற்று (22) கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் தேவையாக இருப்பது புத்த பெருமான் சொன்ன தர்மம். மீள் புனர்நிர்மாணம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இந்த விகாரை சாந்தி சமாதானம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான மத்தியஸ்தலமாக அமைய வேண்டும் என்பது எனது வேண்கோளாக இருக்கின்றது. இந்த விகாரை ஒரு தனிப்பட்ட விகாரையாக இருக்க முடியாது சிங்கள பௌத்த சமயம், சீன பௌத்தம் சமய, கொறிய பௌத்த சமயம் என்று சொல்ல முடியாது. மனித நேயத்தை விரும்புகின்ற அனைவருக்கும் பௌத்த சமயம் சொந்தமானது எனத் தெரிவித்தார்.
யுத்தத்தினால் துக்கமடைந்துள்ள, நலிவுற்றுள்ள, மக்களின் துயர்துடைக்கும் ஸ்தலமாகவும் சமாதானம் நல்லிணக்கம் என்பவற்றிற்கான செய்தியை இங்குள்ள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் ஸ்தலமாகவும் அமைய வேண்டும் என விரும்புகின்றேன்.
பௌத்த மதம் இந்துக் கடவுள்களையும் விகாரைக்குள் வைத்து பூசிக்கின்றது. கிறிஸ்தவ ஆலயத்தில் இந்து, பௌத்த தெய்வங்களை காண முடியாது. முஸ்லீம் சமயமும் அவ்வாறுதான். ஆனால் பௌத்த விகாரையில் முருகன், கணபதி, காளி, பத்தினி தெய்வங்கள் உள்ளே இருக்கின்றது. அதேபோன்று கிறிஸ்தவ சமயத்தை, முஸ்லீம் சமயத்தை பின்பற்ற வேண்டுமானால் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் புத்த சமயத்தினை பின்பற்ற பெயர்மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை.
இங்கே இருக்கின்ற பௌத்த தேரர்களிடம் நான் பணிவாக கேட்டுக்கொள்வது. இப்பிரதேசத்திலே வாழ்க்கின்ற மக்களுடன், ஏனைய சமயத் தலைமைகளுடன், அமைப்புக்களுடன் சினேகபூர்வமாக இருந்து கொண்டு நாட்டின் நன்மைக்காக நல்லிணகத்தை ஏற்படுத்த செயற்படுமாறு வேண்டிக்கொள்கின்றேன். இங்கே தமிழில் புத்த பெருமானின் போதனைகளை தேரர்கள் சொல்லவேண்டும் அப்போதுதான் இப்பிரதேச மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். வேற்றுமை உணர்வு ஏற்படாது போகும் எனக் குறிப்பிட்டார்.
இந்த திஸ்ஸ விகாரையை மீளவும் புனரமைப்பதற்காக அதற்கு சொந்தமான காணியை இனங்கண்டு கொள்வதற்காக அதன் உண்மையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனுமதி வழங்கிய அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.