குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு குஞ்சுக்குளம் பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்காங்கே காணப்படும் சிறு குளங்கள் வற்றி விட்டதனால் கிணத்தடி தண்ணீர் ஊற்றுக்களில் தண்ணீர் சுரப்பதில்லை . எடுக்கப்படும் தண்ணீரில் அதிக கல்சியப்படிவுகள் காணப்படுவதால் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயத்தை குஞ்சுக்குளம் மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் விரைவாக செயற்பட்டு தண்ணீர்த்தாங்கிகள் மூலம் சுத்தமான குடிநீர் தந்து குஞ்சுக்குளம் மக்களின் குடி தண்ணீர்ப் பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தி.பரஞ்சோதியிடம் வினவிய போது,, குடி தண்ணீர்ப் பிரச்சனையானது மன்னார் மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் உள்ளது. அந்த வகையில் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர்த்தாங்கி கள் மூலம் குடி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களும் தண்ணீர் பிரச்சனையை சந்தித்துள்ளமையால் தண்ணீர்த்தாங்கிகள் பற்றாக்குறையாக உள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை சபையின் சிறப்பு அமர்வில் கலந்துரையாடிய பின் குஞ்சுக்குளம் மற்றும் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமங்களின் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.