அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்னன. அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக உள்ள மெல்கம் ட்ர்ன்புல், லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து உறுப்பினர்களால் நீக்கப்பட்டுள்ளதனையடுத்து அவர் பிரதமர் பதவியையும் இழக்க நேரிட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய பிரதமராக ஸ்கொட் மொரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் அவர் பதவி ஏற்பார் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைக் காலமாக ஆளும் லிபரல் கட்சிக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வந்ததுடன், ரேர்ண்புல்லின் எரிசக்தி கொள்கைக்கு அவரது கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலைமையை அடுத்து மெல்கம் ட்ர்ன்புல் பதவி விலக வேண்டும் என, அவரது கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தமையினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்போது மெல்கம் ட்ர்ன்புல் ஏழு வாக்குகளால் வெற்றியீட்டினார். இந்த வாக்கெடுப்பில் மெல்கம் ட்ர்ன்புல்லுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று அமைச்சர்கள், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து மெல்கம் ட்ர்ன்புல்லுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது வாக்கெடுப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நடத்தப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார்.
அதற்கமைய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் மற்றும் நிதியமைச்சர் ஸ்கொட் மொறிசன் ஆகியோருக்கு இடையே தலைமைத்துவ வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
தலைமைத்துவ வாக்கெடுப்பில் நிதியமைச்சர் ஸ்கொட் மொறிசன் அதிக வாக்குகளை பெற்ற நிலையில், புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.