குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டம் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை மீனவர்கள் கடல் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வரதாரமாக மேற்கொண்டு நடத்தி வருகின்ற நிலையில் கடந்த பல நாட்களாக இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி குறித்த மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை சேதப்படுத்தியும் களவாடியும் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 23 ஆம் திகதி இந்திய மீனவர்கள் மீண்டும் அத்து மீறி முத்தரிப்புத்துறை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி களவாடிச் சென்றுள்ளனர் எனவும் இப்படி வலைகளை சேதமாக்குவது கடந்த ஒருவார காலமாக நடந்துகொண்டிருப்பதாகவும் முத்தரிப்புதுறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு தடவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தினமும் கும்பலாக இழுவைப்படகுகளில் வந்து எமது வலைகளை சேதப்படுத்தி அவ்விடத்தில் விட்டுச் செல்வதுண்டு . சில வேளை அவற்றை இழுத்துச்சென்று நடுக்கடலில் விட்டுவிடுவது அல்லது அவற்றை களவாடிச் சென்று விடுகிறார்கள் எனவும் சம்மந்தபட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது காற்று காலம் என்பதால் அதிகளவான மீனவர்கள் பெரும்பாலும் தொழிலில் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் இவ்வாறான பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்படுவதனால் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு கடற்படை ஒத்துழைப்பு வழங்குவதாக தமக்கு சந்தேகம் வருகிறது எனவும் ஏனெனில் கடற்படையினரிடம் ஒவ்வொரு தடவையும் சம்பவங்கள் பற்றி முறைப்பாடுகள் செய்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே தொடர்ச்சியாக பாதிப்படைந்துள்ள மீனவர்களுக்கான இழப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு இந்திய மீனவர்களின் அத்து மீறிய செயற்பாடுகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முத்தரிப்புத்துறை மீனவர்கள் வோண்டுகோள் விடுத்துள்ளனர்.