குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.
கொக்குவில், தாவடி மற்றும் இணுவில் என கடந்த புதன்கிழமை மாலை அடுத்தடுத்து 5 இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. எனினும் கொக்குவில் பிரம்படி லேனில் வீடு ஒன்றுக்குள் புகுந்த சம்பவம் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் காவல்துறையினரால் விசாரணை நடத்தப்படுகிறது.
அதனால் அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முதலாவது சந்தேகநபர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் நேற்றிரவு இரண்டாவது சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இருவரும் கொக்குவில் மேற்கைச் சேர்ந்தவர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.
‘முறைப்பாட்டாளர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். முறைப்பாட்டாளரால் இவர்கள் இருவரது பெயர்களும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன’ என்று காவல்துறையினர் மன்றுரைத்தனர்.
‘சம்பவம் இடம்பெற்ற போது முறைப்பாட்டாளர் வேலைக்குச் சென்றிருந்தார். சந்தேகநபர்களுக்கு இந்தச் சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை’ என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியால் மன்றுரைக்கப்பட்டது.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சந்கேதநபர்கள் இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.