Home இலங்கை ஜேசிபிகளால் தேர் இழுக்கும் காலம் வரும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

ஜேசிபிகளால் தேர் இழுக்கும் காலம் வரும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

by admin

இன்று (24.08.2018) கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத் தேர் திருவிழா. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஆலயத்தின் தேர் இழுக்கவும் சுவாமி தூக்கவும் ஆட்கள் இல்லாத அவல நிலை காணப்படுகின்றது. இது பற்றி குளோபல் தமிழ் செய்திகளும் மக்களின் பண்பாட்டு உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாக செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டும் அவ்வாறான நிலமையே காணப்படுவதாக ஆலய நிர்வாக தரப்பினர் கூறுகின்றனர். இந் நிலையில் இன்றைய தேர் திருவிழாவினை முன்னிட்டு, குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் எழுதிய இப் பத்தி  பிரசுரிக்கப்படுகின்றது. 
-ஆசிரியர்
அன்று வற்றாப்பளை கண்ணனி அம்மன் கோவிலின் பொங்கல் விழா. அன்றைக்கு முல்லைத்தீவுப் பாடசாலைகளுக்கு விடுமுறை.  பாடசாலை வழமையாக விடும் நேரத்திற்கு முன்னதாக ஒரு அரை மணித்தியாலம் முன்கூட்டி பாடசாலை விடப்பட்டது. அன்றைக்கு பாடசாலை மாணவர்களது வரவும் மிகக் குறைவு. பாடசாலை விடும் தருவாயில் எங்கள் பள்ளி உதவி முதல்வர், பக்கத்தில் உள்ள முருகன் கோயிலில் இன்றைக்கு கடைசித் திருவிழா என்றும், ஆசிரியர்களுக்கு அன்னதானம் இருப்பதாகவும்  எல்லோரும் கட்டாயம் அதை உண்ண வேண்டும் என்றும் அழைத்தார். இரண்டு ஆசிரியர்கள் மாத்திரமே நின்றனர்.
முரசுமோட்டை என்ற ஊரையும் அந்த முருகன் கோயிலையும் யுத்த காலத்தின் ஒரு பகுதியில் நினைக்காத தருணங்கள் இல்லை. அந்த ஆலயமோ தெய்வங்களை பாதுகாத்த ஆலயமாக காட்சி அளித்தது. பாதி மாணவர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்.  இறுகிப்போன பள்ளி உடைகளில் அவர்களில்லை. வண்ண வண்ணமான பட்டு சட்டைகளை அணிந்தபடி முகம் முழுவதும் புன்னகையுடன் கைகளை காட்டி மகிழ்ந்து வரவேற்றார்கள். அவர்களுடன் அன்னதானம் உண்டு மகிழ்ந்து புறப்பட்டால், உழவு இயந்திரங்களில் இன்னும் சில பள்ளி மாணவர்கள் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். குதூகலமும் கொண்டாட்டமுமாக செல்லும் அவர்களும் கையசைத்தபடி சென்று கொண்டிருந்தார்கள்.
அந்த ஆலயச் சூழலும் பிள்ளைகளின் புன்னகையும்  அன்னதானமும் வீட்டில் உணவருந்தும்போது இருப்பதில்லை. மனதில் அமைதியும் உற்சாகமும் மகிழ்வும் பெருகியது. இதற்கு முதன்மையான காரணம் வகுப்பறைகளில் பிள்ளைகளிடம் தென்படாத புன்னகையை அவர்களின் குதூகலத்தை பார்த்ததுதான். இதையெல்லாம்  அவசரமாகவே பேருந்து ஏறி வீடு செல்லும் ஒரு சக ஆசிரியர் இழந்துவிட்டார்கள் என்றே எண்ணிக் கொண்டேன்.
அண்மையிலே யாழ்ப்பாணத்தில் பசுவதைக்கு எதிராக ஒரு சின்னப் போராட்டம் நடந்ததை வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும். யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல ஈழத்திலேயே குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மதவாதம் இருப்பதில்லை. அத்துடன் பன்மைக் கலாசாரப் பண்புகளை ஏற்கும் மனநிலையும் உண்டு. ஒரு காலத்தில் சைவ உணவகங்கள்தான் பிரபலமும் அதிகமும். இப்போது அசைவ உணவகங்கள் அதிகரித்திருக்கிறது. மாட்டு இறைச்சி உணவையும் யாழ்ப்பாணத்தவர்கள் விரும்பியே உண்ணுகிறார்கள். எந்த மததத்தவைரயும் மதம் சார் விருப்புங்களையும் ஈழத் தமிழர்கள் எதிர்ப்பதில்லை. இப்தார் பண்டிகைகளின்போது சம்சாவையும் இறைச்சிக் கஞ்சியையும் குடித்து வாழ்த்துவது வழமைதான்.
இந்தியாவில் நீங்கள் இந்துவா? கிறீஸ்தவரா? என்றே கேட்கும் வழக்கம் உள்ளது. ஈழத்தில் நீங்கள் சைவமா? வேதமா என்றே கேட்பார்கள். இலங்கை அரசின் சட்டதிட்டங்களிலும் பதிவுகளிலும் இந்து என இருந்தாலும் ஈழத்தில் சைவநெறியும் சைவர்கள் என்ற அடையாளமுமே நிலவுகிறது. ஈழப் பள்ளிகளில் பாடப் புத்தகங்களில்கூட சைவறெி என்ற பாடமே சமயப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. பெரும்பாலும் எங்கள் வீடுகளில் மாட்டு இறைச்சி சமைக்கப்படுவதில்லை. திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அசைவ உணவு சமைக்கப்படுவதுமில்லை. சில சைவர்கள் அசைவ உணவை உண்பதும் இல்லை.  ஆனால் அவர்களின் பிள்ளைகள், வெள்ளிக் கிழமையிலும் வீட்டுக்குத் தெரியாமல் மாட்டு இறைச்சியை சாப்பிட்டு விட்டு வீட்க்கு வருவதும் நடப்பதுண்டு.
இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் பசுவதைக்கு எதிராகவும் மிருகபலிக்கு எதிராகவும் பேசுபவர்கள் யார் என்று பார்த்தால் மனிதர்களை கொன்று குவிக்க வேண்டும் என்று வெறியை விதைக்கும் சிங்களப் பேரினவாதிகள்தான், அவர்கள். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை ஈழ இனப்படுகொலையை ரசித்துக் கொண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக செயற்பட பசுவதை சட்டத்தையும் சைவர்களுக்கு எதிராக செயற்பட முன்னேஸ்வரம் மிருகபலியையும் பயன்படுத்துகின்றனர். நாய்களை கொல்லுவதற்கான தடைச்சட்டத்தை மகிந்த ராஜபக்ச கொண்டுவந்தார் அவரே மனிதர்களை கொல்லுவதற்காக பளபளக்கும் பெயர்களில் சட்டங்களை இயற்றினார். சரணடைந்த மனிதர்களை காணவில்லை என்று கூறிவிட்டு ஜனாதிபதி மாளிகையிலிருந்து காணாமல் போன கிளி ஒன்றை மீட்டார்.
அண்மையில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் அரசு தலைமையில் ஒரு குழு வந்தது. நாடு முழுவதும் அவர்கள் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டனர். கிளிநொச்சியிலும் ஒரு கூட்டத்தை நடாத்தினர். அதன்போது தமிழ் அச்சுப் பதிப்புத் துறையின் முன்னோடியாக ஊ.வே. சாமிநாதையரை தமிழகத்தில் உள்ள சிலர் முன்னிலைப்படுத்தினாலும் ஈழத்தை சேர்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளையே முன்னேடி என்ற தொனியில் விரிவுரையாளர் செந்தில் உரையாற்றினார். கூட்டத்தின் முடிவில் அபிப்பிராயங்கள் பெறப்பட்டன. இதன்போது, எழுந்த ஆசிரியர் சுந்தரலிங்கம் லோகேஷ்வரன், தமிழப் பதிப்பு முயற்சிகள் பற்றிப் பேசும்போது ஆறுமுகநாவலரின் பங்களிப்பு பற்றி பேசாதிருந்தது திட்டமிட்ட இருட்டடிப்பு செயல் என்று கூறினார்.
அந்தக் கருத்தை பேராசிரியர் வீ. அரசு அவ்வளவாக ஏற்றுக் கொள்ளவில்லை. திருமுறுகாற்றுப்படை, பெரியபுராணம் போன்ற நாவலர் சைவ சமயம் சார்ந்த தமிழ் நூல்களையே பதிப்பித்ததாகவும் சி.வை. தாமோதரம்பிள்ளைதான் கலித்தொகை போன்ற இலக்கியங்களை பதிப்பித்தாகவும் அவர் கூறினார். நாவலர் சமய அடிப்படையிலேயே நூல்களை பதிப்பித்தார் என்பது அவருடைய கருத்து. ஆனாலும் ஈழத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்கும்  நோக்கிலேயே நாவலர்  அதனை செய்தார். அதுவே அவருடைய போராட்டமும் இலட்சியமும் பணியுமாக இருந்தது.
ஆறுமுக நாவலர்கள் அவசியம் என்கிற ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்திருக்கிறோம். பகுத்தறிவு கருத்தாக்கங்கள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும் ஈழத் தமிழர் பண்பாடு, பண்பாட்டு உரிமை என்பதை பாதுகாப்பது இன்றைக்கு மிகவும் அவசியமாகிவிட்டது. ஒரு புறத்தில் இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்களின் பண்டை தாக்கியும் அழித்தும் வருகிறது. தமிழ் நிலமெங்கும் பவுத்த அடையாளங்களை திணித்து ஒரு பண்பாட்டு அழிப்பை செய்து வருகிறது. அத்துடன் பண்பாட்டு மறுப்பும் முன்னெடுக்கப்படுகின்றது. வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தை தமிழர்கள் புனர் நிர்மாணம் செய்ய முடியாது என்பதும் அப் பகுதியில் புத்தர் சிலையை வைப்பதையும் என்னவென்பது?
அரசுதான் அப்படிச் செய்கிறது என்றால் நாமும் அதயையே  செய்கிறோம். கிளிநொச்சியில் 2009போருக்குப் பின்னர் ஒரு அவலம் நடந்தேறி வருகிறது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் தேர் இழுக்கவும் திருவிழாவில் சுவாமியை தூக்கிச் செல்லவும் ஆட்கள் இல்லை. ஆனால் இராணுவத்தினர் வெசாக் பண்டிகைக்கு அலங்கரித்து, இரவில் பாற்சோறு போட்டால் கூட்டம் கூட்டமாக மக்கள் திரள்கின்றனர். சைவ ஆலயங்களில் செய்யப்படும் அன்னதானங்களை சாப்பிடுவதற்கு ஆட்கள் இல்லை. சைவ ஆலயங்களுக்கு புத்தர்சிலைகள் நுழைக்கப்பட, புத்தர் சிலைகளை நோக்கி நாம் நகர்வது தமிழ் சமயப் பண்பாட்டை அழிவை இன்னும் வேகமாக்கும் செயலாகும்.
ஒரு காலத்தில் அதாவது 2009இற்கு முன்னரான காலத்தில் இவ் ஆலயத் திருவிழாக்களில் மக்கள் கூட்டம் பெருமளவில் காணப்படும். இந்த நிலமை தற்போது ஏன் இல்லாமல் போனது என்பது சிந்திக்க வேண்டியது. ஆலய சூழலில் பாரிய இராணுவ முகாம் காணப்படுகின்றது. அத்துடன் ஆலயத்தின் ஒரு பகுதி நெடுங்காலமாக இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு தற்போது ஆலயத்தின் நிர்வாகத்தால் கையேற்றப்பட்டுள்ளது. எம்முடைய வீடுகள், பாடசாலைகள் மாத்திரமின்றி ஆலயங்களும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தர் சிலைகள் படையெடுக்கும் காலத்தில் நமது ஆலயங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
போர், இன அழிப்பு, காணாமல் ஆக்கப்பட்டமை என பல்வேறு மன நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள ஈழத் தமிழ் சைவ சமூகம் தம்முடைய ஆற்றாமைகளை தீர்க்க ஆலயயம் செல்லலை பயன்படுத்த முடியும். நாம் சைவ ஆலயங்களை நோக்கி விலகியிருந்தால், ஜேசிபிக்களால் தேர் இழுக்கும் காலம் வரும். நாம் வெசாக் பண்டிகை சோற்று முண்டியடித்தால் ஜேசிபிக்களால் தேர் இழுக்கும் காலம் வரும். தமிழ் இனத்தை அழிக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணங்களை நாமே ஈடேற்றும் செயலாகவும் இது இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More