வாரத்துக்கொரு கேள்வி – 24.08.2014
தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ள விடயம் பற்றி கேள்வி ஒன்று வந்துள்ளது. அதனையே இந்த வார கேள்வியாக்குகின்றேன்.
கேள்வி: ஜனாதிபதி செயலணியில் அங்கம் வகிக்க உங்களையும் உங்கள் பிரதம செயலாளரையும் மட்டும் அழைத்திருந்தார் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள். நீங்கள் காரணம் காட்டி அச் செயலணியின் முதற் கூட்டத்தைப் பகிஷ்கரித்தீர்கள். உங்கள் கடிதத்தில் வட கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை அமைச்சர்களும் இடம் பெறாமை பற்றிக் குறை கூறியிருந்தீர்கள். இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் அடுத்த கூட்டத்திற்கு அழைத்துள்ளார். உங்கள் அமைச்சர்கள் கூப்பிடப்படவில்லை. இக் கூட்டத்திற்கு அழைப்பு உங்களுக்கு விடுக்கப்பட்டதா? இவ்வாறான கூட்டத்தில் கலந்து கொள்ளாமை என்ன நன்மையைத் தரும்?
பதில்: திரு.சம்பந்தன் அவர்கள் அண்மைக்காலங்களில் அரசியல் தீர்வை உடனே வழங்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றார். அத்துடன் வேலையற்ற பட்டதாரிகள் அவரை திருகோணமலையில் சந்தித்த போது வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுப்பது தனக்கு முக்கியமல்ல என்றும் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே தமது தலையாய கடன் என்ற முறையில் கூறியிருந்தார். இந்தக் கருத்தைக் கிளிநொச்சி கூட்டமொன்றிலுந் திரும்பக் கூறியிருந்தார். அதிலிருந்து அரசியல் தீர்வுக்கு அவர் கொடுத்து வந்திருக்கும் முக்கியத்துவம் புலனாகின்றது. அவரின் அந்தக் கருத்துக்குப் பலம் ஊட்டுவதாகவே ஜனாதிபதி செயலணியில் 16 பாராளுமன்ற அங்கத்தவர்கள் பங்கேற்காமல் அரசியல் தீர்வை உடனே தர வேண்டும் என்று சேர்ந்து கோருவது எமக்கு அரசியல் ரீதியாகப் பலன் அளிக்கும் என்று நேற்றைக்கு முந்திய தினம் கௌரவ சம்பந்தன் அவர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். ஆனால் அந்தக் கருத்தை எமது பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் பணத்தையுந் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மக்களின் சுதந்திர வாழ்வையும் நீண்டகால அரசியல்த் தீர்வையும் அவர்கள் நாட முனைவதாகத் தெரியவில்லை. அரசியல் தீர்வைப் பெற, எமது ஒற்றுமையை எடுத்துக் காட்ட, செயலணிக்குச் செல்லாது ‘அரசியல் தீர்வு முதலில், பொருளாதார நன்மைகள் அதன்பின்’ என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே குரலில் கூற முன்வந்திருந்தார்களேயானால் அரசாங்கம் அதன் பொருட்டான சர்வதேச கண்டனங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டி வந்திருக்கும். அரசியல் தீர்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பார்கள். அத்துடன் குறித்த செயலணி வேலைகளை நடாத்த நாம் அதில் பங்குபற்ற வேண்டும் என்று அவசியமில்லை. அத்துடன் இராணுவத்தினருடன் சேர்ந்து தான் நாங்கள் இந்த செயலணியில் பங்குபற்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. எப்படியும் எமக்கு உதவி புரிகின்றோம் என்று அரசாங்கம் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. சேராவிட்டாலும் ஜனாதிபதி அவர்கள் குறித்த செயலணியை நடத்தியே செல்வார். ஆனால் நாம் எமது ஒற்றுமையைக் காட்ட அரசியல் தீர்வை வலியுறுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். எனக்கு செயலணியின் செயலாளர் திரு.சிவஞானசோதி அவர்கள் மாண்பு மிகு ஜனாதிபதியின் அழைப்பை மீண்டும் வலியுறுத்தி அடுத்த கூட்டத்தில் சமூகமளிக்குமாறு வேண்டியுள்ளார். அது பரிசீலனையில் உள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளாமை
1. அரசியல் தீர்வின் அத்தியாவசியத்தை வலியுறுத்தும்
2. பொருளாதார அபிவிருத்திக்கு அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசியல் தீர்வுக்குக் கொடுக்கவில்லை என்பதை உலகறியச் செய்யும்.
3. சேர்ந்து தமிழ் பிரதிநிதிகள் இயங்கினால் எமது ஒற்றுமை வெளிப்படும். நாங்கள் அரசாங்கத்தால் வீசப்படும் எலும்புத் துண்டுகளுக்காக நாக்கை நீட்டிக் கொண்டு ஓடிச் செல்கின்ற இனமல்ல என்பதை நாம் சேர்ந்து வலியுறுத்தலாம்.
4. இராணுவத்தினர் மக்கள் முன்னேற்றத்தில் ஈடுபடுதலைக் கண்டிக்கலாம்.
5. செயலணி கூட்டத்திற்குப் போகாமலே எமது மக்களின் பொருளாதார விருத்தியை உறுதி செய்யலாம். அவர்கள் செய்வதில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம்.
சிலர் மகாவலி காணி அபகரிப்பைத் தடுக்க இதில் சேர வேண்டும் என்கின்றார்கள். பாராளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் செய்ய முடியாததை செயலணியில் சேர்ந்து செய்ய முடியும் என்று இவர்கள் கூறுவது விந்தையாக இருக்கின்றது.
முன்னர் வழிநடத்தல் குழுவில் சேர்ந்த போது எமது அரசியல்க் கருத்துக்களை நாம் வலியுறுத்திப் பேசவில்லை. எமக்கென சில அரசியல் சிபார்சுகள் இருப்பதாகவும் நாம் கூறவில்லை. ஈற்றில் அரசாங்கத்தின் கருத்துப்படியே எல்லாம் நடந்தேறி வருகின்றன. அதற்கு எம்மவர்கள் ஒத்துழைத்து வருகின்றார்கள். ஜனாதிபதி செயலணியில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினருடனுஞ் சேர்ந்து ஒரே மேசையைச் சுற்றிக் கூடியிருந்து வடக்கு கிழக்கின் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு படையினர்களுக்கெதிரான யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேச அரங்குகளில் குறிப்பாக ஜெனிவாவில் பேசப் போகின்றார்களா? அப்படிப் பேச எத்தனித்தால் ‘இப்பொழுது தான் படையினருடன் பொருளாதார விருத்தி சம்பந்தமாகச் சேர்ந்து விட்டீர்களே இனி ஏன் யுத்த குற்ற விசாரணை? அவர்களைக் கொண்டே உங்கள் இடங்களை அபிவிருத்தி செய்யுங்களேன்?’ என்று சர்வதேச ரீதியாகக் கேட்கப் போகின்றார்கள். படையினரைச் சேர்க்காவிட்டால் மட்டுந்தான் நாங்கள் செயலணியில் செயல்படுவோம் என்று கூட இவர்கள் கூறுவார்களோ தெரியாது. அதற்கு நெஞ்சுரம் வேண்டும். செயலணியில் படையினருடன் சேர்ந்து செயல்படுவது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். செயலணியால் செயல்படுத்த இருக்குந் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் யாவையும் அரசாங்கத்தால் ஒருதலைப்பட்சமாகத் தயாரிக்கப்பட்டவை. அவற்றை வேண்டுமெனில் அவர்களே செயல்படுத்த விட்டு விட்டு நாம் ஒதுங்கி இருந்து அரசியல் தீர்வை அத்தியாவசியப்படுத்துவதே தற்போதைய உசிதமான செயற்பாடு.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்