செய்தியாக்கம்- குளோல் தமிழ் விசேட செய்தியாளர்..
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த சில ஆண்டுகளாக அழகியல் பாட ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுவது கடுமையான குறைந்திருப்பதாக மாகாண கல்வி திணைக்கள வட்டாரங்களின் ஊடாக அறிய முடிகின்றது. அழகியல் பாட ஆசிரியர்களை நியமிப்பதற்கான தடை எதற்காக எங்கிருந்து உருவாக்கப்படுகின்றது என்பதை அறிய முடியாதபோதும் இது மாகாணத்தின் அழகியல் பாட கல்வியை பாதிக்கும் ஒரு செயற்பாடு என்றே கூறப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் அழகியல் பட்டதாரிகள் அல்லது நுண் கலைத் துறைப் பட்டதாரிகள் பல்கலைக் கழகங்கள் வாயிலாகவும் அழகியல் அல்லது நுண்கலை பல்கலைக்கழக வாளகங்களின் ஊடாகவும் உருவாக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது கல்விக்கு முற்றிலும் பொருத்தமற்ற தொழிலை செய்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். சங்கீத பாடத்தில் முதற்தரத்தில் சித்தி பெற்ற அழகியல் பட்டதாரி ஒருவர் அத்துறையில் முதுகலையில் கல்வி கற்ற பின்னரும் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை ஆற்றுகிறார்.
சங்கீதம், சித்திரம், நடனம், நாடகம் முதலிய துறைகளில் பட்டம் முடித்த பட்டதாரி வளம் வீணடிக்கப்படுகின்றது. சித்திரபாடத்தில் கலாநிதிப் பட்டம் ஒருவர் கிளிநொச்சியில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பிரதேச செயலகத்தில் பணி புரிவதாக கூறுகிறார். பல நுண்கலைப் பட்டதாரிகள் முகாமைத்துவ உத்தியோகத்தர்களாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் கிராமசேவகர்களாகவும் பணியாற்றுகின்றனர். கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதாவது ஆறு வருடங்களாக நடைபெற்ற ஆசிரியர் ஆட்சேர்ப்பு பரீட்சையில் அழகியல் பாட ஆசிரியர்கள் உள்ளீர்க்கப்படாமையே இதற்கு காரணமாகும்.
வன்னி உள்ளிட்ட பின் தங்கிய பிரதேசத்தில் அழகியல் பாட ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குரை காணப்படுகின்றது. சில ஆசிரியர்கள் இரண்டு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக கடமை புரிகின்றனர். பல பாடசாலைகளில் அழகியல் பாட ஆசிரியர்கள் இல்லாத நிலமை காணப்படுகின்றது. அடிப்டைப் பாடங்களான அழகியல் பாடங்களுக்கு எவ்வாறு தொடர்ந்தும் ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலமை காணப்படுகிறது? வடக்கு கிழக்கிலேயே இந்த நிலமை காணப்படுவதாகவும் பிற மாகாணங்களில் இவ்வாறான நிலமை இல்லை என்று துறைசார் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் அழகியல்பாட செயற்பாடுகள் மற்றும் கலைச் செயற்பாடுகள் வாயிலாக தமிழ் மக்கள் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தனர். .இன அழிப்புப் போரால் இன ஒடுக்குறை செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட இனம் என்ற வகையில் அழகியல் பாடங்களின் மூலம் தமிழர்கள் ஆற்றுப்படுத்தப் பெறலாம். எனவே இலங்கையில் இந்தப் பாடத்தை அதிகமும் ஊக்குவிக்க வேண்டிய மாகாணங்கள் வடக்கு கிழக்கே. ஆனால் நிலமையே வேறாக உள்ளது. உண்மையில் வடக்கு கிழக்கில் அழகியல் செயற்பாடுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன.
செய்தியாக்கம்- குளோல் தமிழ் விசேட செய்தியாளர்