இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை, இலங்கைக்கு அழைத்துச் செல்ல இரு பிரிவுகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவென, ஜனாதிபதி காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பணிப்புரைக்கு அமையவே, இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அர்ஜுன் மஹேந்திரனை, நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, நாடு கடத்தல் சட்டத்தின் கீழான இயலுமையை தேடியறியுமாறும், ஜனாதிபதி காரியாலயத்தின் மேலதிகச் செயலாளருக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாரென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அர்ஜுன் மஹேந்திரனை இந்நாட்டுக்கு அழைத்துவருவதற்கு இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கையை எடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதென அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இதுவரையிலும் இருந்த, நாடு கடத்தல் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதியின் கீழ் கடந்த வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள கடல்சார் பாதுகாப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ், நாடு கடத்தல் சட்டமும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கிடையில், கைதிகளை பரிமாறிக் கொள்ளுதல் “ நாடு கடத்தல்” என அடையாளப்படுத்தப்படும் என்பதுடன், சர்வதேச காவற்துறை ( இன்டர் போல்) ஊடாக இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிரான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவின் முன்னிலையில் கடந்த 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில், தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுப் பத்திரிகை மற்றும் சிவப்பு எச்சரிக்கை என்பனவற்றின் பிரதிகளைத் தனக்கு வழங்குமாறு, சிங்கப்பூர் சர்வதேச காவற்துறை ஊடாக, இரகசியப் காவற்துறையிடம் அர்ஜுன மஹேந்திரன், கோரியிருப்பதாக, மேலதிக சொலிசிடர் ஜெனரல் ஹரிபிரிய ஜயசுந்தர, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.