ஐ.நாவை வலியுறுத்திப் பிரேரணை!
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் விருப்பை அறியும்பொருட்டு பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தும் பிரேரணை ஒன்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் நடாத்தப்புடும் இந்த வாக்கெடுப்புக்கு அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் உதவ வேண்டும் என்று வலியுத்தி வடக்கு மாகாண அரசு, தீர்மான வரைபு ஒன்றை முன்வைக்கவுள்ளது.
வடக்கு மாகாண ஆளும் தரப்பு உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இந்த தீர்மானத்தை கொண்டுவரவுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் 130ஆவது அமர்வு இடம்பெறுகின்றது. அதன்போதே இந்த தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அறிக்கைகள் மற்றும் ஐக்கியநாடுகள் சபை செயலாளரின் பொறுப்புக் கூறல் தொடர்பான அறிக்கைகளை கவனத்தில் எடுத்தும் இந்த தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கை 1948இல் பிரிட்டனிலிருந்து சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது தொடக்கம் அரசியல் சீரழிவுக்கு உள்ளாகியுள்ளதாகவும், போரி்ன் மூல காரணமான அரசியல் சிக்கல் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளதாகவும், இதனை வடக்கு மாகாண அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு சமத்துவமான அரசியல் தீர்வைக் காண தவறியுள்ளதாகவும், போருக்கான மூல காரணத்தை தீர்க்க தவறியுள்ளதாகவும் வரலாற்றில் மீண்டும் வன்முறை மீள் எழுகை பெறாதிருக்கவும் வடக்கு கிழக்கில் மக்களின் அபிலாசைகளை அறியும் பொதுவாக்கெடுப்பை ஐ.நா நடாத்த வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.