குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கிராம மக்கள் அடிப்படை சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பூநகரி வாடியடிச் சந்தியிலிருந்து 25 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கிராமமான கௌதாரிமுனையில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 374 பேர் வாழ்கின்றனர். இந்த மக்கள் தங்களின் அடிப்படை சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு பூநகரி வாடியடிக்கு சுமார் 25 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டும்.
குடும்பநல உத்தியோகத்தர்கள் கூட சீராக கிராமத்திற்கு வருகை தருவதில்லை எனவும் இதனால் கர்ப்பிணித் தாய்மார்கள், சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் எனவும் கிராம மக்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. முதியவர்கள் சுகாதார தேவையின் பொருட்டு பெரும் நெருக்கடிகளின் மத்தியில் பூநகரிக்கு வந்து செல்வதாகவும் மேலும் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.
கௌதாரி முனையிலிருந்து பூநகரி வாடியடிக்கு நாளாந்தம் காலை ஏழு மணிக்கு புறப்படும் பேரூந்து பின்னர் மாலை ஜந்து மணிக்கு பூநகரியிலிருந்து கௌதாரிமுனை நோக்கி செல்கிறது. இதனால் இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் தினமும் அவதியுற்று வருகின்றனர்.
கடந்த காலங்களில் மாத்திற்கு ஒரு தடவை வெளிநோயாளர் பிரிவு சேவை இடம்பெற்று வந்தது என்றும் ஆனால் தற்போது அவை இடம்பெறவில்லை என்வும் கௌதாரிமுனை மக்கள கவலை தெரிவித்துள்ளனர். அத்தோடு தங்களது கிராமத்தில் சுகாதார நிலையக் கட்டடம் உண்டு எனவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்