படையினரிடம் சரணடைந்த பின் காணாமல் ஆக்கப்பட்ட பாலகுமாரனும் மகனும் இளைஞனும்...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அம்பாறையிலும் இருவேறு போராட்டங்களை முன்னெடுத்தள்ளனர்.
அத்துடன், இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வாகன தொடரணி நேற்று முன்தினம் கொழும்பில் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. இன்று இந்தப் பேரணி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளதோடு, அங்கு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யுத்த காலத்திலும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும், காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களது உறவினர்கள் தவிக்கின்றனர்.
குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்ட பலரின் நிலை குறித்து அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 500 நாட்களையும் கடந்துவிட்டது.
தமது உறவினர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமான இன்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இவ்விடத்தை சர்வதேசம் மிகப் பாரதூரமான பிரச்சினையாக கவனத்திற்கொண்டு தீர்வை பெற்றுத்தர வேண்டுமென உறவினர்களை இழந்தவர்கள் கோருகின்றனர்.