இலங்கை பிரதான செய்திகள்

யுத்த பகுதிகளில் இராணுவத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் எங்கே?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

 

இறுதி யுத்தம் நிகழ்ந்த இடங்களில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்தின் கட்டளைக்கமைய சரணடைந்தவர்கள், இராணுவத்தினால் அரச போக்குவரத்துப் பேரூந்துகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்று இது வரை தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (30) மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.

-இதனைத்தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜரிலேயே இஅவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த மகஜரில் மேலும்

வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கெதிரான சர்வதேச தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் எமது நிலையையும் நீதிக்கான எமது கோரிக்கைகளையும் இலங்கை அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் முன்வைக்கிறோம்.

இலங்கையில் நடை பெற்ற முப்பதாண்டு கால இன அடக்கு முறைப் போரக் காலத்திலும் அதற்குப் பின்னரான ஐந்தாண்டு கால சர்வாதிகார அரசாட்சியின் போதும் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சார்ந்த எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவ்வாறு எமது உறவுகளை எம்மிடமிருந்து அபகரித்துச் சென்றவர்கள் இனந்தெரியாதவர்கள் மாத்திரமல்ல எம்மால் இனங்காணப்பட்ட அரச படையினர்கள் மற்றும் அரசின் கூலிப்படைகளைச் சார்ந்தவர்களாவர். குறிப்பாக இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வெள்ளை வான் மூலம் ஆட்கடத்தல்கள் நடைபெற்றன.

விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட நபர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். கடற்றொழிலுக்கு சென்றவர்கள் கடலில் வைத்து கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டனர். அது மாத்திரமன்று, போரின் இறுதிக்காலங்களில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக கப்பல் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொறுப்பில் கொண்டு செல்லப்பட்டவர்களும் பின்னர் வைத்தியசாலைகளிலிருந்து காணாமலாக்கப்பட்டனர்.

மெனிக்பாம் போன்ற அரச படைகளின் பூரணக்கட்டுப்பாட்டுப் பகுதியிருந்தும் நபர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர். போராளிகள் எனும் சந்தேகத்தில் தடுப்பு முகாம்களில் வைக்கபட்டிருந்த எமது உறவுகள் சிலர் எம்மிடமிருந்து மறைக்கப்பட்டுவிட்டனர்.

குறிப்பாக, இறுதியுத்தம் நிகழ்ந்த இடங்களில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள், இராணுவத்தின் கட்டளைக்கமைய சரணடைந்தவர்கள், இராணுவத்தினால் அரச போக்குவரத்துப் பேரூந்துகளில் ஏற்றிகொண்டு செல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.
அரசியல் நோக்குடன் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு வன்முறைத் தந்திரோபாயமாக ஆட்களைக் கடத்திக் காணாமல் ஆக்குவதைக் கடந்த அரசுகள் கடைபிடித்து வந்ததை நாம் உலகுக்கு பகிரங்கப்படுத்துகிறோம். இலங்கை அரசே இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

2015 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற நாட்டின் புதியதலைமை, புதிய பாராளுமன்றம் ஆகியவை எமது துயரங்களை கருணையோடு புரிந்து கொண்டு எமக்கு ஆவண செய்வார்கள் என நம்பினோம். பல ஆணைக்குழுக்களுக்கு முன்னால் வாக்குமூலம் அளித்தோம். எமது குரலுக்கு உரியபதில் கிடைக்வில்லை.

இதனால், எம்மில் பலர் தமது உறவுகளை மீளத்தருமாறு கோரி தமது வயோதிப வயதிலும் உணவு தவிர்ப்பிலும், வீதியோர அகிம்சாப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். 500 நாட்களுக்கு மேலாக இந்த மூத்த தாய்மார் மழையிலும் கடும்வெயிலிலும் இரவு பகலாக வீதியோரத்தில் அமர்ந்து நீதி கேட்கின்றனர்.

ஆனால், அரசு உரிய பதிலை இன்னும் தரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகளைப் பற்றி கதைக்கவில்லை. எனவே, மீளவும் எமது கோரிக்கைகளை இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கும், இலங்கைப் பாராளுமன்றத்துக்கும், சர்வதேச சமூகத்துக்கும் முன்வைக்கிறோம்:

1. இலங்கை அரசு உடனடியாக சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச தரத்திலான நீதிப் பொறிமுறையை அமைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை குறித்த உண்மையைக் கண்டறிய வேண்டும். குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

2. ஐ.நா. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் சார் பணிக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை உடன் அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.

3. இலங்கை அரசாங்கத்தினால் ஐ.நா. தீர்மானம் 30/1 இற்கு அமைய உருவாக்கப்பட்ட தேசிய கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையை அரசு உத்தியோக பூர்வமானதாக்க வேண்டும். அதில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்களின் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

4. ஐ.நா. தீர்மானம் 30/1 தீர்மானத்தில் கூறப்பட்ட உரிமைகளை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.

5. ஐ.நா. தீர்மானம் 30/1 இனை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கால நீடிப்பு செய்வதனூடாக இலங்கையை ஐ.நா.வின் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும்.

6.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சாட்சிகள், அவர்களின் வழக்கறிஞர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

7.இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் இராணுவ மயமாக்கலை நீக்கவேண்டும்.

8.போரினால் பாதிக்கப்பட்டோரையும், சமூக செயற்பாட்டாளர்களையும், பொதுமக்களின் அன்றாட நிகழ்வுகளையும் இலக்காகக் கொண்டு விரிவாக்கப்பட்டிருக்கும் இராணுவ மற்றும் காவல்துறை புலனாய்வுத்துறையின் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளும் வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
என குறித்த மகஜரில்  குறிப்பிடப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link