Home இலங்கை “அங்கை இருந்து வந்து முருங்கை மரத்திலை ஏத்திப்போட்டுப் போயிடுவினம்”

“அங்கை இருந்து வந்து முருங்கை மரத்திலை ஏத்திப்போட்டுப் போயிடுவினம்”

by admin

சனி முழுக்கு – 6 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

நல்லூர்த் திருவிழா நடக்கிது. அதோடை கனக்கக் கலியாண வீடுகளுக்கும் நாள் வைச்சிருக்கினம். எப்பிடியும் ஒரு குடும்பத்துக்கு ஒராள் தன்னும் இப்ப  வெளியாலை இருக்கினமெல்லே! அவை இப்பிடியான சாட்டை வைச்சுக் கொண்டு வந்துதானே ஒருக்கா ஊரைப் பாத்திட்டுப் போகலாம். அப்பிடி என்ரை மருமோன்ரை சகோதரிக்குக் கலியாணம் எண்டு அவனும் இப்ப குடும்பத்தோடை வந்திருக்கிறான். வந்திறங்கின உடனை அவன் என்னட்டை முதல் கேட்ட கேள்வி “மாமா இஞ்சை உங்களிட்டை வை-பை இருக்கோ?” எண்டதுதான். எனக்கு முதலிலை அது விளங்கேல்லை. “பொலித்தீன் பையளைப் பாவிக்க வேண்டாம் எண்டு அரசாங்கம் சொன்னாப் பிறகு கடதாசிப் பையனைச் சனம் இப்ப பாவிக்கத் துவங்கிவிட்டினம். ஓம் இருக்கு.” எண்டன். அவன் சிரிச்சுப்போட்டு தான் கேட்டதை எனக்கு விளங்கப்படுத்தினவன். அப்பதான் எனக்குத் தெரிஞ்சிது ரெலிபோனுக்குத் தீன் போடக் கேக்கிறான் எண்டு. இரண்டாவதாக்  கேட்ட  கேள்வி  “பாத்ரூம் அற்றாஜ்டோ?” அதாவது குளியலறை கக்கூஸ் வீட்டோடை சேந்தோ இருக்கு? எண்டதுதான். இல்லைக் கொஞ்சந் தள்ளித் தண்ணி ராங்குக் கீழைதான் கட்டியிருக்கிறம் எண்டன். “மாமா இன்னும் நீங்கள் மாட்டு வண்டிக் காலத்திலைதான் இருக்கிறியள். உலகம் இப்ப எங்கை போயிட்டுது தெரியுமோ? எண்டு கேட்டானே ஒரு கேள்வி. எனக்கு வந்த கோவம். மெல்ல அடக்கிப் போட்டன். எட உங்கை போக முன்னம் நீயும் பனை, பத்தையளைத் தேடிப்போன ஆள் தானே? இப்ப என்ன அதை எல்லாத்தையும் மறந்து நிண்டு ஆடுறாய்? எண்டு கேக்க வேணும் எண்டுமனசுக்கை நினைச்சுக் கொண்டு ஒண்டும் பேசாமல் இருந்திட்டன். அவனுக்கு என்ரை கோலம் விளங்கீட்டுது.அவனுக்கு என்னை எப்பிடி மடக்கலாம் எண்டு தெரியம். உடனை தோளிலை கிடந்த பாக்குக்குள்ளாலை தான் எனக்கெண்டு கொண்டு வந்த போத்திலை எடுத்துத் தந்திட்டு உள்ளுக்கை போட்டான்.

கொஞ்சம் பொறுத்து அவன்ரை மனுசி வந்தாள். “எப்பிரி மாமா இருக்கிறியள்? சுக்கம் தானே?” எண்டிட்டு “இங்க கிற்ற சலூன் இறுக்கா?” எண்டாள். “ஓம் கோயிலடியிலை மணியத்தின்ரை சலூன்  இருக்கு. ஆருக்குப் பிள்ளை தலைமயிர் வெட்டப்போறாய்? எண்டு கேட்டன்.“தலமுடி வெட்ட இல்ல. பேஷியல் செய்ய” எண்டாள். பிறகு இஞ்சை ஆருக்காருக்கோ ரெலிபோன் எடுத்துப் பேசினாள். கொஞ்ச நேரத்திலை ஒருத்தி ஒரு ஓட்டோவிலை வந்து இவளையும் கூட்டிக் கொண்டு போனவள். போகேக்கை என்னோடை இருக்கிற பெறாமேளையும் கூட்டிக் கொண்டு போய் நாலு மணித்தியாலத்துக்குப் பிறகு திரும்பி வந்தினம். வரேக்கை அவளவையின்ரை கோலத்தைப் பாக்க  எனக்கு விசராக்கிப்போட்டுது.

அதுக்கை முசுப்பாத்தி என்னெண்டால் அவையோடை போன என்ரை பெறாமேளை எங்கையெண்டு தேடினதுதான். அவள் கறுப்பி எண்டாலும் நல்ல முகவெட்டு. கன்னங் கரேல் எண்டு நீட்டுத் தலைமயிர். பாக்க வடிவுதான். இவளவை அவளின்ரை தலைமயிரையும் அரைவாசியா வெட்டி முகத்துக்கும் அதை இதைத் தேச்சு கண் புருவத்தையும் வழிச்சு அலங்கோலமாயக் கொண்டு வந்து விட்டாளவை. எனக்கு அவளின்ரை தலை வெட்டைப் பாக்கேக்கை என்ன மாதிரிக் கிடந்தது எண்டால் எங்கடை ஊர்ச் சாவல் சேத்துக்கை கிடந்து உருண்டு போட்டு வரேக்கை நல்ல காய்ஞ்ச வால் இறகுகள் சேறுபட்டு அரியண்டமாக் கிடக்குமெல்லே? அப்பிடி இருந்திது. ஆனால் அவளைப் பாத்தன் கழுத்துக்கை பிடிச்சவை கழுத்தைத் திருப்பாமல் இறுக்கிப் பிடிக்கிற மாதிரிக் கழுத்தை வைச்சுக் கொண்டு சுத்திச் சுத்திக் கண்ணாடியிலை தன்ரை தலைமயிர் வெட்டைப் பாத்து இரசிச்சுக் கொண்டு நிக்கிறா. அந்தக் கண்ணுறாவியைக் கண் கொண்டு பாக்கேலாமை கிடந்திது. கேட்டதுக்குச் சொல்லுறாளவை  “உதைத்தான் இப்ப உள்ளவையும் விரும்பீனம். நீங்கள் மாமா இன்னும் பங்கருக்கை இருக்கிறமாதிரித்தான் இருக்கிறியள். வெளியிலை வந்து ஊருலகத்திலை என்ன நடக்கிதெண்டதையும் பாருங்கோ” – எண்டு. ஒண்டும் கதைக்கேலாமைக் கிடக்கு. நல்லூருக்கை பாத்தன் . வெள்ளைக் காறியள் தலைமயிரை வளத்துப் பின்னிச் சீலை உடுத்து,  சிவத்த ஒட்டுப் பொட்டுப் போட்டுக் கொண்டு திரியினம். அவளவைக்கு எங்கடை கலை கலாச்சாரத்திலை இருக்கிற பெறுமதி என்ன எண்டு வளங்கிது. ஆனால் இவை எங்கடையள் என்ன செய்யினம் எண்டு பாத்தால் இப்பிடிச் செடில் குத்திக் காவடி ஆடினம்.

அப்ப உவளவையின்ரை நினைப்பென்ன? கலை கலாசாரம் பண்பாடு எண்ட எல்லாத்தையும் வெட்டிக் குழி தோண்டிப் புதைச்சாப் பிறகு உவை என்னத்தைச்  செய்யப் போகினம். ஆக மிதமிஞ்சி இன்னும் ஒரு இருவது வருசத்துக்கு இவை இஞ்சை வருவினம். பிறகு உவையின்ரை பிள்ளை குட்டியள் உவயைக் கொண்டு போய் அங்கை உள்ள வயோதிப மடத்திலை விட்டுடிவினம். அவை இஞ்சை வந்து என்ன சொந்தங் கொண்டாடப் போயினமே? அப்ப இப்ப வந்து இங்கை உள்ளவையளைக் குழப்பாமல் எங்கடை கலாசாரத்தையும் அனுசரிச்சுப் போற மாதிரியெல்லே விசியங்களைக் கொண்டு போக வேணும்.

இதென்ன நடக்கிதெண்டால், கொஞ்சப் பேர் வந்து கோயிலை இடிச்சுக் கட்டுறன் எண்டிட்டு கோயிலையும் சனத்தையும் இடஞ்சல் படுத்தினம். அவை கொஞ்சக் காசோடை வந்து முதலிலை ஊருக்கை பெரியவை எண்டு இருக்கிறவைக்கும், ஐயருக்கும் சேத்து வாய்க்கரிசி போட்டுடுவினம். பிறகு அவை வாய்திறக்காயினம். பிறகு தாங்கள் நினைச்ச  சதிரை ஆடுறதுதானே?

இன்னுங் கொஞ்சம் வந்து என்ன ஏதெண்டு பாராமல் இஞ்சை இருக்கிறவைக்கு உதவி செய்யிறம் எண்ட கரிசனையிலை அவையின்ரை வசதி வாய்ப்பைக் கூட்டி அவையளை முருங்கை மரத்திலை ஏத்திப்போட்டுப் போயிடுவினம். ஊருக்குச் சோக்காட்டின பிறகு அவை என்னெண்டு கீழை இறங்கிறது. அப்பிடியே அதைக் காப்பாற்ற கடனைக் கிடனை வேண்டிச் சமாளிச்சுக் கடைசியிலை கந்தறுகிறதுதானே!

இப்ப கிட்டியிலை நடந்ததொரு விளையாட்டைச் சொல்லுறன். ஒரு பகுதி சுவிஸிலை நிண்டு வந்தவை. சகோதரி வீட்டைதான் நிண்டவை. அவளின்ரை பெடி  உற்சாகம் குறைஞ்ச ஒரு சீவன். நாள் கூலிக்குப் போய் வந்தது.வந்தவை தாங்கள் நிக்கிற லீவிலை  அந்தப் பெடியை  வேலைக்குப் போக வேண்டாம் எண்டு நிப்பாட்டி லேணேர்ஸ்ஸிட்டை அனுப்பி  அதுக்கு ஒட்டோ ஓடப் பழக்கத் துவக்கிவிட்டு அவை திரும்பிப் போட்டினம். பெடியும் தட்டித்தவறிப் பழகி லைசென்ஸ் எடுத்திட்டு அவைக்கு அறிவிச்சால் அவை இண்டைக்கு நாளைக்கு எண்டு சொல்லிக் கடத்தி கொஞ்சக் காசை அனுப்பி உதை முதலிலை கட்டி ஒட்டோவை எடுங்கோ பிறகு மிச்சத்தைத்தாறம் எண்டு சொல்ல, இஞ்சையுள்ள பேயடையளும் நம்பி லீசிங் போட்டு ஒரு ஓட்டோவை எடுத்தாச்சு. பெடி ஒரு நாளைக்கு ஓடும். மற்ற நாள் படுத்திடும். அப்பிடி இப்பிடி ஓடினதாலை லீசிங்கை ஒழுங்காக் கட்டேல்லை. கொம்பனியாலை ஆளைத் தேடி வந்திட்டினம்.பிறகு வந்தவைக்கு இவை சுவிஸ் கதையைச் சொல்ல அவங்களும் ஒரு மாதத் தவணையைக் குடுத்திட்டுப் போட்டாங்கள். பிறகு சுவிஸுக்குப் போன் பண்ணி விசியத்தைச் சொல்லுறதுக்காக வேண்டிப் போன் எடுத்தால் அங்காலை இருந்து பதில் இல்லை. சரி நிலமையைச் சரிக்கட்ட வேணும் எண்டிட்டுப் பெடியின்ரை சகோதரி காப்பை அடைவு வைச்சு லீசிங் காசிலை ஒரு பகுதியைக் கட்டினால் அவங்கள் அதிலை கட்டாமல் கிடந்த  வட்டியைக் கழிச்சுப்போட்டாங்கள். இப்ப அந்த அடவையும் எடுக்கேலாமல் திண்டாடுகினம். ஒரு மாதிரி சுவிஸுக்கு ரெலிபோன் எடுத்தால் அவன் மாமன்காரன் காரிலை அடிபட்டு ஆஸ்பத்திரியிலையாம். அதாலை அங்கையிருந்து ஒரு சதமும் இப்ப வராது. அதுக்கிடையிலை ஒண்டரை மாசத்துக்கப் பிறகு லீசிங் கம்பெனி வந்து ஓட்டோவையும் பறிச்சுக் கொண்டுபோயிட்டினம். இப்ப எல்லாரும் நடு ரோட்டிலை நிக்கினம்.  கேட்டியளே  சங்கதியை என்னெண்டு?

  • “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

Spread the love
 
 
      

Related News

1 comment

JP September 2, 2018 - 8:29 am

தொடர்ந்து
படிக்க வைக்கிறிங்க. எங்க
எங்க எண்டு தேட வைக்கிறிங்க|

Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More